பாகிஸ்தான் மின்வெட்டு: மின்சாரம் இல்லாமல் இருண்டு போய் இருக்கும் முக்கிய நகரங்கள்
பாகிஸ்தானில் இன்று(ஜன 23) அதிகாலை தேசிய மின்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். மிகப்பெரிய நகரங்களான கராச்சி, தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் உட்பட நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தெற்கு பாகிஸ்தானில் "அதிர்வெண் மாறுபாடு" ஏற்பட்டதைத் தொடர்ந்து மின்சார கிரிட் செயலிழந்தது என்று பாகிஸ்தான் மின்துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகிர் கூறியுள்ளார். இது "ஒரு பெரிய நெருக்கடி அல்ல", விரைவில் மின்சாரம் திரும்பும் என்று அவர் மேலும் கூறி இருக்கிறார். பாகிஸ்தான் அடிக்கடி மின்வெட்டுகளால் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. கடைசியாக அக்டோபரில் ஏற்பட்ட பெரிய மின்தடையின் போது மின்சாரம் மீண்டும் வர பல மணிநேரம் ஆனது.
எதனால் இந்த மின்வெட்டு ஏற்பட்டது?
உள்ளூர் நேரப்படி சுமார் 07:30 மணிக்கு(02:30 GMT) மின்சார கிரிட் "அதிர்வெண் இழப்பை சந்தித்தது, இது ஒரு பெரிய செயலிழப்பை ஏற்படுத்தியது" என்று எரிசக்தி அமைச்சகம் கூறியுள்ளது. இதை மீட்டமைக்க வேலைகள் தீவரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டிருக்கிறது. இன்று இரவு 10 மணிக்குள்(பாகிஸ்தான் உள்ளூர் நேரம்) மின்சாரம் திரும்பிவிடும் என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார். "குளிர்காலத்தில், நாடு முழுவதும் மின்சாரத் தேவைகுறைவாக இருப்பதால், பொருளாதாரத்தை கட்டுப்படுத்த, நாங்கள் எங்கள் மின் உற்பத்தி அமைப்புகளை இரவில் தற்காலிகமாக மூடி விடுவோம்" என்று அவர் ஜியோ டிவிக்கு பேட்டி அளித்திருக்கிறார். இதை மீண்டும் காலை வேளையில் 'ஆன்' செய்த போது மின்சார கிரிட்டில் ஏற்பட்ட வோல்ட்டேஜ் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.