
அட்டாரி-வாகா எல்லை வாயிலைத் திறந்து, இந்தியாவிலிருந்து தனது குடிமக்களை திரும்ப அழைத்துச் செல்லத் தொடங்கும் பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் குறுகிய கால விசாக்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் சிக்கித் தவித்த தனது குடிமக்கள் திரும்பி வருவதற்கு, பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை அட்டாரி-வாகா எல்லையில் உள்ள வாயில்களை மீண்டும் திறந்தது.
எல்லையில் பாக்., மக்கள் கிட்டத்தட்ட 24 மணிநேர தவிப்பிற்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏப்ரல் 22 படுகொலைக்குப் பிறகு விசாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஒரு வாரமாக எல்லை வழியாக பலர் வெளியேறினர்.
எனினும் வியாழக்கிழமை, பாகிஸ்தான் தனது எல்லைகளை மூடியதால், பல பாகிஸ்தானியர்கள் இந்தியப் பகுதியில் சிக்கித் தவித்தனர்.
வெளியேற்றம்
இரு நாடுகளும் கெடு விதித்ததை தொடர்ந்து வெளியேறிய பிரஜைகள்
இந்தியா சில விசா வகைகளை ரத்து செய்வதாக அறிவித்ததிலிருந்து, புதன்கிழமை 125 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக நாட்டை விட்டு வெளியேறினர். ஏழு நாட்களில் வெளியேறியவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில், பாகிஸ்தான் விசாக்களை வைத்திருக்கும் 15 இந்திய குடிமக்களும் எல்லையைக் கடந்து சென்றனர்.
உள்வரும் பக்கத்தில், 152 இந்திய நாட்டினரும், நீண்டகால இந்திய விசாக்களுடன் 73 பாகிஸ்தானிய நாட்டினரும் அமிர்தசரஸ் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழைந்தனர், இதனால் அந்தந்த மொத்த எண்ணிக்கை 1,617 ஆக உயர்ந்தது.
நடவடிக்கை
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கை
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை அறிவித்தது.
விசாக்களை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தி வைத்தது, பாகிஸ்தானால் இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் அதன் வான்வெளியை மூடியது மற்றும் பாகிஸ்தான் நாட்டினரின் சமூக ஊடக கணக்குகளையும் தடை செய்தது.
பாகிஸ்தானும் பதிலுக்கு சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்தது. அதோடு இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடுவதாகவும் அறிவித்தது.