
அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
ஆப்கானிஸ்தானுடனான எல்லை மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது பாகிஸ்தானில் வசிக்கும் அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் தங்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தனது சமூக ஊடகப் பதிவில், பாகிஸ்தானின் நிலமும் வளங்களும் அந்நாட்டின் 25 கோடி குடிமக்களுக்கானது மட்டுமே என்றும், ஆப்கானிஸ்தானியர்களுக்கானது அல்ல என்றும் ஆசிஃப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். "பாகிஸ்தான் மண்ணில் வசிக்கும் அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் தங்கள் தாயகம் திரும்ப வேண்டும். அவர்களுக்கு இப்போது காபூலில் சொந்த அரசாங்கம், சொந்த கலிபத் உள்ளது." என்று பாதுகாப்பு அமைச்சர் ஆசிஃப் கூறினார். "சுயமரியாதை உள்ள நாடுகள் வெளிநாட்டு நிலத்திலும் வளங்களிலும் செழிப்பதில்லை." என்று மேலும் கூறினார்.
தெஹ்ரிக்-இ-தாலிபான்
தெஹ்ரிக்-இ-தாலிபானிற்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாகக் குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் அரசாங்கத்தைக் கவிழ்க்க நோக்கமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தானுக்கு (TTP) ஆப்கானிஸ்தான் அடைக்கலம் தருவதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் மோசமடைந்தது. சமீபத்திய வாரங்களில், பாகிஸ்தான் TTP மறைவிடங்களைத் தாக்குவதாகக் கூறிக்கொண்டு, ஆப்கானிஸ்தானில் தாக்கியது. இதற்குப் பதிலடியாக, ஆப்கானியப் படைகள் டூராண்ட் கோட்டில் பல பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் கைப்பற்றின. இதற்கிடையே போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) நடத்திய புதிய வான்வழித் தாக்குதலில் மூன்று கிரிக்கெட் வீரர்கள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானில் நடைபெறவிருந்த முத்தரப்புத் தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விலகியுள்ளது.