ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம்
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பி.டி.ஐ) கட்சி தலைவர் இம்ரான் கானுக்கு எதிராக மார்ச் 18ஆம் தேதி பெடரல் ஜூடிசியல் வளாகத்தில் (FJC) நடந்த மோதல்களைத் தொடர்ந்து, ஏழு வழக்குகளில் அவருக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்(IHC) ஜாமீன் வழங்கியுள்ளது. இம்ரான் கான், இன்று(மார் 27) IHC இல் தாக்கல் செய்த மனுக்களில், கோல்ரா, பாரா காஹு, ராம்னா, கன்னா மற்றும் CTD காவல் நிலையங்களில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள ஏழு வழக்குகளில் பாதுகாப்பு ஜாமீன் கோரினார். மார்ச் 18ஆம் தேதி தோஷகானா வழக்கில் இம்ரான் கான் பெடரல் நீதிமன்றத்தில் ஆஜரான போது, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த வன்முறையை அடுத்து இந்த வழக்குகள் பதிவு ப்பட்டன.
144 தடை உத்தரவை விதித்திருந்த இஸ்லாமாபாத் நிர்வாகம்
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மனுவை IHC தலைமை நீதிபதி அமீர் பரூக் மற்றும் நீதிபதி மியாங்குல் ஹசன் ஔரங்கசீப் ஆகியோர் அடங்கிய இரு நபர் கொண்ட IHC டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டால் ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்திக்க நேரிடும் என்று இந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை வழக்கறிஞர் சல்மான் சப்தார் என்பவர் சமர்ப்பித்தார். "மேலும், தனிப்பெரும் அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதால், மனுதாரருக்கு முன்-ஜாமீன் வழங்கப்படாவிட்டால், அவரது அரசியல் எதிரிகளால் தங்கள் அரசியல் லட்சியங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்ற அச்சம் உள்ளது." என்றும் இந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இஸ்லாமாபாத் நிர்வாகம் இதற்காக இன்று 144 தடை உத்தரவை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.