'நீதிமன்ற வளாகத்தில் என்னை கொலை செய்ய பார்த்தார்கள்': இம்ரான் கான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியலிடம் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நீதிமன்ற விசாரணையில் மெய்நிகராக வீடியோ மூலம் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். தான் நேராக நீதிமன்றத்திற்கு வந்தால் தன்னை கொன்றுவிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தேஜ்ரீக்-இ-இன்சாஃப் தலைவரான இம்ரான் கான், சனிக்கிழமை நீதிமன்றத்திற்கு சென்ற போது அவரை கொலை செய்யவதற்கான ஏற்பாடுகள் நீதிமன்ற வளாகத்தில் செய்யப்ட்டிருந்ததாக கூறியுள்ளார். தன்னை கொல்வதற்கு சுமார் 20 தெரியாத நபர்கள் ஏற்பாடு செய்யப்ட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
கயிறை வைத்து கொலை செய்ய திட்டம்: இம்ரான் கான்
நீதிமன்ற வளாகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து கொண்ட இம்ரான் கான், "நீதித்துறை வளாகத்தின் வாசலில் நுழைந்தபோது நான் எதிர்கொண்ட காட்சிகள் இது தான். என்னை சிறையில் அடைக்க அவர்கள் கூடவில்லை, போலீஸ்காரர்கள் அந்த தெரியாதவர்களுடன் இணைந்து பெரும் சண்டை போடுவதை போல் நடித்து என்னை கொலை செய்வதற்கு தான் கூடி இருந்தார்கள்" என்று ட்வீட் செய்துள்ளார். ஆனால், அல்லாஹ்வின் அருளால் நான் தப்பித்தேன் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்கள் கையில் வைத்திருந்த கயிறை வைத்து தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.