இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத்திற்கு இன்று(மார் 18) சென்று கொண்டிருந்த போது, லாகூரில் உள்ள அவரது வீட்டுக்குள் போலீஸார் நுழைந்ததாக அவரது அரசியல் கட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டிற்குள் போலீசார் நுழையும்போது இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பேகம் தனியாக வீட்டில் இருந்தார் என்று கூறப்படுகிறது. "புஷ்ரா பேகம் தனியாக இருக்கும் ஜமான் பூங்காவில் உள்ள எனது வீட்டின் மீது பஞ்சாப் போலீசார் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். எந்த சட்டத்தின் கீழ் இதைச் செய்கிறார்கள்?" என்று இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார்.
இம்ரான் கானின் கான்வாய் கவிழ்ந்தது
இம்ரான் கானின் ஆதரவாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே பல நாட்களாக ஏற்பட்டு வரும் கடுமையான மோதல்களுக்கு இடையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜராக இஸ்லாமாபாத் சென்று கொண்டிருந்த இம்ரான் கானின் கான்வாயில் இருந்த ஒரு கார் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இம்ரான் கான் லாகூரில் உள்ள ஜமான் பார்க் இல்லத்தில் இருந்து இஸ்லாமாபாத் புறப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வருகையை முன்னிட்டு, இஸ்லாமாபாத்தின் நீதித்துறை வளாகத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும், விரும்பத்தகாத எதுவும் நடக்காமல் தடுக்கவும் அப்பகுதி பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.