Page Loader
இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள்
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடைய ஆதரவாளர்கள் கல் வீச்சில் ஈடுபட்டனர்

இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள்

எழுதியவர் Sindhuja SM
Mar 14, 2023
07:00 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசாரை அவரது ஆதரவாளர்கள் தடுத்தனர். ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடைய ஆதரவாளர்கள் கல் வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நீர் பீரங்கி பொருத்தப்பட்ட கவச வாகனங்களை போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இம்ரான் கானை கைது செய்வதற்காக இஸ்லாமாபாத்தில் இருந்து ஒரு போலீஸ் குழு வந்ததை அடுத்து, இம்ரான் கானின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு வெளியே கூடினர் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் அமீர் மிர் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்

கற்கள் மற்றும் செங்கற்களை வீசிய தொண்டர்கள்

இம்ரான் கானின், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பிடிஐ) கட்சியினர் வன்முறையைத் தொடங்கினர் என்றும் இதில் பல போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் "இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதிசெய்ய வேண்டும். அது தான் நல்லது. இல்லையெனில் சட்டம் அதன் கடமையை செய்யும்." என்று அமீர் மிர் தெரிவித்திருக்கிறார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சையத் ஷாஜாத் நதீம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிடிஐ தொண்டர்கள் போலீசார் மீது கற்கள் மற்றும் செங்கற்களை வீசத் தொடங்கினர். அதற்கு பதிலடியாக போலீசார் அவர்கள் மீது தண்ணீர் பீரங்கியை வீச தொடங்கினர் என்றும் தடியடி நடத்தினர் என்றும் சையத் கூறியுள்ளார்.