பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 120 பேர் படுகாயம்
பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் இன்று(ஜன 30) நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 120 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் NDTV செய்திகள் தெரிவித்திருக்கிறது. இந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தது தற்கொலைப்படையை சேர்ந்த ஒருவர் என்று கூறப்படுகிறது. சுஹ்ர் தொழுகைக்காக மக்கள் மசூதியில் கூடியிருந்தபோது, உள்ளூர் நேரப்படி மதியம் 1:40 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசூதி, போலீஸ் தலைமையகத்திற்குள் அமைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. சம்பவம் நடந்தபோது மசூதிக்குள் சுமார் 260-பேர் இருந்ததாக போலீஸ் அதிகாரி சிக்கந்தர் கான் தெரிவித்திருக்கிறார். தன் உடலில் வெடிகுண்டு வைத்திருந்த ஒருவர், மசூதியில் தொழுகையின் போது முன் வரிசையில் இருந்ததாகவும், அவர் தன்னைத்தானே வெடிக்க வைத்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவசரகால பாதுகாப்பை அமல்படுத்திய காவல்துறையினர்
காயமடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, பெஷாவர் அதிகாரிகள் அந்த இடத்தை சுற்றி அவசரகால பாதுகாப்பை அறிவித்திருக்கின்றனர். இதற்கிடையில், முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) தலைவருமான இம்ரான் கான், பெஷாவரில் நடந்த "பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை" கண்டித்தும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்தும் ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருக்கிறார். மேலும், இஸ்லாமாபாத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டாக்டர் அக்பர் நசீர் கான், நாட்டின் தலைநகரையும் "உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில்" வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நகரத்தின் நுழைவு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், "பாதுகாப்பான நகரம்" என்ற அமைப்பு மூலம் கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும் இஸ்லாமாபாத் காவல்துறை கூறியுள்ளது.