வாக்குப்பதிவு மோசடிகள் நடைபெற்றதற்காக பாகிஸ்தானில் பல வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இம்ரான் கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இ-இன்சாப் மற்றும் பிற கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பொதுத்தேர்தலின் போது மோசடி நடந்ததாகக் கூறப்படும் சில வாக்குச் சாவடிகளில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (ECP) மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.
மறு வாக்குப்பதிவு பிப்ரவரி 15 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.
மறுபுறம் இன்னும் கிட்டத்தட்ட 10 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தற்போது வரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை படி எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மை பெறவில்லை.
241 மில்லியன் மக்கள் வசிக்கும் நாடான பாகிஸ்தான், கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி, பொதுத்தேர்தலை சந்தித்தது.
நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடி மற்றும் பயங்கரவாதத்தால் பிளவுபட்டிருக்க, அடுத்ததாக ஆட்சியை கைப்பற்றவிருப்பது யார் என்பது குழப்பமாக உள்ளது.
இம்ரான்கான்
போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள இம்ரான்கான் ஆதரவாளர்கள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர்கள் அதிகபட்ச இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இம்ரான் கானின் வழக்கறிஞராக செயல்படும் பிடிஐ தலைவர் கோஹர் அலி கான், பாகிஸ்தானில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மக்களின் ஆணையை மதிக்க வேண்டும் என்றார்.
தனது கட்சி ஆட்சியை அமைக்க அதிபர் ஆரிப் ஆல்வி அழைப்பார் என்றும், சிறையில் இருக்கும் இம்ரான் கான் நாட்டின் அடுத்த பிரதமரை தீர்மானிப்பார் என்றும் அவர் கூறினார்.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை இரவுக்குள் வெளியிடப்படாவிட்டால், ஞாயிற்றுக்கிழமை தேர்தல் அதிகாரி அலுவலகங்களுக்கு வெளியே PTI அமைதியான போராட்டங்களை நடத்தும் என்றும் அவர் கூறினார்.
மற்ற கட்சிகள்
மற்ற கட்சிகளின் நிலை என்ன?
சிறையில் உள்ள இம்ரான் கான், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவரது கட்சிக்கு ஆதரவான சுயேச்சை வேட்பாளர்கள் 102 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைவிட அந்தக் கட்சி இன்னும் 31 இடங்கள் குறைவாகவே உள்ளது.
8 இடங்களின் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாகிஸ்தான் தேர்தல் ஆணையமோ இணையப் பிரச்சினைகளால் இறுதி முடிவுகள் தாமதமாகியுள்ளன என தெரிவித்தது.
நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், இராணுவத்தின் ஆதரவுடன், தேர்தலில் வெற்றிபெற விரும்பினாலும், வெறும் 73 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
அவர் சுயேட்சை வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் எனக்கூறப்படுகிறது.
முன்றாவது கட்சியான பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 54 இடங்களில் வெற்றி பெற்றது.