நாட்டின் இளம் பிரதமர்; தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகளை தேர்வு செய்ய முடிவு
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தாய்லாந்தில் நடைபெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில், பியூ தாய் கட்சியின் பொதுச்செயலாளர் சோராவோங் தியெந்தோங்கால் தாய்லாந்தின் பிரதம மந்திரி பதவிக்கு பெடோங்டர்ன் ஷினவத்ரா பரிந்துரைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்னர் நெறிமுறை மீறல் தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் முன்னாள் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது. 37 வயதான பேடோங்டர்ன் ஷினவத்ரா பியூ தாய் கட்சியின் தலைவராக உள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இல்லை. அந்நாட்டு சட்டப்படி அது தேவையும் இல்லை. பாராளுமன்றத்தில் அவரை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுப்பது தொடர்பான வாக்கெடுப்பின்போது அவர் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
பேடோங்டர்ன் ஷினவத்ராவின் குடும்பப் பின்னணி
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அவர் அங்கீகரிக்கப்பட்டால், தாய்லாந்தின் இளம் பிரதமர் என்ற பெருமையை பேடோங்டார்ன் பெறுவார். மேலும், ஷினவத்ரா குடும்பத்தில் இருந்து நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் மற்றும் மூன்றாவது தலைவர் என்ற சிறப்பையும் அவர் பெறுவார். பேடோங்டர்ன் கோடீஸ்வரர் தக்சின் ஷினவத்ராவின் மகள் ஆவார். ஒட்டுமொத்த பெரும்பான்மை இடங்களை வென்ற முதல் தாய்லாந்து அரசியல்வாதி தக்சின் ஆவார். எனினும், 2006இல் இராணுவ சதிப்புரட்சி மூலம் அவர் வெளியேற்றப்பட்டார். அதேபோல், பேடோங்டர்னின் அத்தை யிங்லக் ஷினவத்ரா 2011 முதல் 2014 வரை அந்நாட்டின் பிரதமராக இருந்துள்ளார்.