பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670க்கும் மேல் அதிகரித்தது என்று குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. 150க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்துள்ளன என்று உள்ளூர் அதிகாரிகள் கணித்துள்ளதை அடுத்து, பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கலாம் என்று ஐ.நா குடியேற்ற அமைப்பின் தலைவரான செர்ஹான் அக்டோப்ராக் தெரிவித்துள்ளார். "தற்போது 670 க்கும் மேற்பட்டோர் மண்ணுக்கு அடியில் புதைந்திருப்பதாக அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்" என்று அக்டோப்ராக் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறியுள்ளார். முதலில் 100 பேர் மட்டுமே இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்பட்டது. இன்று வரை ஐந்து உடல்கள் மற்றும் ஆறாவது பாதிக்கப்பட்டவரின் ஒரு கால் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஆதரவைக் கோருமா பப்புவா நியூ கினியா அரசு?
பப்புவா நியூ கினியாவில் உள்ள அவசரகால மீட்பு பணியாளர்கள் இன்று தப்பிப்பிழைத்தவர்களை பாதுகாப்பான நிலத்திற்கு அழைத்து சென்றனர். இதற்கிடையில், பப்புவா நியூ கினியா தீவின் அரசாங்கம், அதிகாரப்பூர்வமாக சர்வதேச ஆதரவைக் கோர வேண்டுமா என்பதை பரிசீலித்து வருகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் 6 முதல் 8 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டன, 2 நாட்களாக நடந்து வரும் மீட்பு பணியில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், பூமி மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருக்கும் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கையை மீட்பு குழுவினர் கைவிட்டனர் என்று செர்ஹான் அக்டோப்ராக் தெரிவித்துள்ளார். மக்களும் இதை புரிந்து கொள்ள தொடங்கியுள்ளதால், பப்புவா நியூ கினியா தீவே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.