தண்டனை காலம் முடிந்தும் விடிவு காலம் இல்லை; வங்கதேச சிறைகளில் 160-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவிப்பு
செய்தி முன்னோட்டம்
வங்கதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 238 இந்தியர்களில் 168 பேர் தங்களது சிறை தண்டனைக் காலத்தை முழுமையாக நிறைவு செய்துள்ளனர். இருப்பினும், அவர்களை தாயகம் அனுப்புவதற்கான முறையான தூதரக நடவடிக்கைகள் நிறைவடையாததால் அவர்கள் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர் என தி டெய்லி ஸ்டார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல், எல்லை தாண்டுதல் மற்றும் மனித கடத்தல் போன்ற குற்றங்களுக்காக இவர்கள் தண்டனை பெற்றவர்கள் ஆவர்.
இந்திய தூதரகம்
இந்திய தூதரகத்தின் விளக்கமும் குடியுரிமை சரிபார்ப்புத் தாமதமும்
வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் தூதரகப் பிரிவு அதிகாரி இது குறித்துக் கூறுகையில், தண்டனைக் காலம் முடிந்து குடியுரிமை முழுமையாக சரிபார்க்கப்பட்ட 25 இந்தியர்கள் மட்டுமே தாயகம் திரும்புவதற்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வழங்கிய 121 பேர் கொண்ட பட்டியலில் உள்ள பலரின் விவரங்கள் அவர்களின் இந்திய குடியுரிமையை உறுதிப்படுத்த போதுமானதாக இல்லை.
இந்த சிறைவாசிகளை நேரில் சந்தித்து சரிபார்க்க தூதரகம் வங்கதேச அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
வெளிநாட்டு சிறைவாசிகள்
வங்கதேசத்தில் உள்ள வெளிநாட்டு சிறைவாசிகளின் எண்ணிக்கை நிலவரம்
வங்கதேச சிறைகளில் 15 நாடுகளை சேர்ந்த மொத்தம் 407 வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக மியான்மர் நாட்டை சேர்ந்த 133 பேர் சிறையில் உள்ளனர்.
மேலும் நைஜீரியாவை சேர்ந்த 6 பேரும், பாகிஸ்தான் மற்றும் மலேசியாவை சேர்ந்த தலா 3 பேரும் அங்கு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
தூதரகத் தாமதங்களே இவர்களின் விடுதலையை மேலும் நீட்டிக்க செய்கின்றன.
கூடுதல் செலவு
நிர்வாக சிக்கல்களும் வங்கதேச அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவுகளும்
பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டு சிறைவாசிகள் தனியறைகளில் அடைக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் அவர்களைத் தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது சிறை நிர்வாகத்திற்குப் பெரும் நெரிசலையும், அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையையும் உருவாக்குவதாக வங்கதேச சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக பேச்சுவார்த்தைகள் மூலமே இந்த சிக்கலுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனக் கருதப்படுகிறது.