மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா
வட கொரியா இன்று(பிப் 20) இன்னொரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய இராணுவம் கூறியுள்ளது. இது 48 மணி நேரத்திற்குள் வடகொரியா ஏவும் இரண்டாவது ஏவுகணையாகும். அமெரிக்கா-தென் கொரியா இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்ட ஒரு நாளில் இது நடந்திருக்கிறது. "வட கொரியா ஒரு சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது" என்று ஜப்பான் பிரதமர் அலுவலகமும் இன்று காலை ட்வீட் செய்துள்ளது. ஏவுகணை "ஏற்கனவே விழுந்துவிட்டதாகத் தெரிகிறது" என்று ஜப்பானிய கடலோர காவல்படை கூறியுள்ளது. அதை தவிர வேறு எந்த விவரங்களையும் அது வெளியிடவில்லை.
48 மணி நேரத்திற்குள் 2 ஏவுகணையை ஏவிய வட கொரியா
சனிக்கிழமை அன்று வட கொரியாவால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு(ICBM) பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து நேற்று கூட்டு விமானப் பயிற்சிகளை நடத்தியது. ICBM, 66 நிமிடங்கள் பறந்து ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில்(EEZ) தரையிறங்கியதாக ஜப்பான் கூறியிருந்தது. சனிக்கிழமை ஏவப்பட்ட ஏவுகணை Hwasong-15 என்றும், அபாயகரமான அணுஆயுத்தை தங்களாலும் வீச முடியும் என்றும் வட கொரியா அதன்பின் கூறி இருந்தது. இன்று வட கொரியா ஏவிய ஏவுகணையின் நோக்கம் என்னவென்று இப்போது வரை தெரியவில்லை. இது குறித்து வட கொரியா விரைவில் தகவல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.