இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடத்தில் எந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் இல்லை: வெறிச்சோடி கிடக்கும் பெத்லகேம்
பொதுவாக , கிறிஸ்துமஸ் தினத்தன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமான பெத்லகேமில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். ஆனால், இந்த வருடம் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து கொண்டிருப்பதால், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பெத்லகேமிற்கு சுற்றுலாப் பயணிகள் பெரிதாக யாரும் வரவில்லை. அதனால், கிறிஸ்துமஸ் விளக்குகள், கிறிஸ்துமஸ் மரம் எதுவுமே இல்லாமல் பெத்லகேம் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. பெத்லகேம் நகரம், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன பகுதியான மேற்கு கரையில் அமைந்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர், இனம் மற்றும் மதம் அடிப்படையிலான போர் என்பதால் பெத்லகேம் நகரத்திற்கு பொதுவாக வரும் சுற்றுலாப் பயணிகள் யாரும் இந்த வருடம் வரவில்லை. அதனால், அந்த நகரத்தில் உள்ள சுற்றுலா தலங்களும், ஹோட்டல்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலை
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாதக் குழு இஸ்ரேல் மீது திடீர் வான் வழி தாக்குதலை நடத்தியது. அப்போது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, இரண்டு மாதமாக ஹமாஸ் குழுவை அழிப்பதற்காக காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 17,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று பாலஸ்தீன பகுதியில் உள்ள ஒரு அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் 70 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனால், அப்பகுதியில் இன்னும் பதட்டம் நிலவி வருகிறது.