நைஜரில் திடீர் ராணுவ புரட்சி; அதிபரை வீட்டுச் சிறையில் வைத்த ராணுவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் அதிபர் முகமது பாஸூம், புதன்கிழமையன்று (ஜூலை 26) நாட்டில் திடீரென உருவாகியுள்ள ராணுவ புரட்சியால் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார். நைஜரின் ஜனாதிபதி காவலரின் உறுப்பினர்கள் அரண்மனையைச் சுற்றி வளைத்து, தலைநகரான நியாமியில் உள்ள அவரது குடியிருப்பு மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் சாலைகளை சீல் வைத்த ஒருநாளுக்கு பிறகு, இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வியாழக்கிழமை வெளியாகியுள்ளது. அதிபரை விடுவிக்க பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் இருந்தபோதிலும், பேச்சுவார்த்தை பாதியிலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதிபரை சிறைபிடித்துள்ள வீரர்கள், முகமது பாஸூமை விடுவிக்க மறுத்துவிட்டனர். இதனால் நாட்டில் கொந்தளிப்பான அரசியல் சூழல் நிலவுகிறது.
ராணுவ புரட்சிக்கான பின்னணி
ராணுவ தலைமையேற்று நடத்தி வரும் கர்னல்-மேஜர் அமடூ அப்த்ரமனே, தனது தொலைக்காட்சி உரையில், அதிபர் பாஸூமின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வீரர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறினார். தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நாட்டின் பாதுகாப்பு நிலைமையின் சரிவு மற்றும் மோசமான பொருளாதார மற்றும் சமூக நிர்வாகம் ஆகியவை முக்கிய காரணம் என்று அவர் கூறினார். நாட்டைப் பாதுகாப்பதற்கான தேசிய கவுன்சில் என்று தங்களை அழைத்துக் கொண்ட அவர், சர்வதேச மற்றும் தேசிய சமூகத்துடன் இணைந்து செயல்பட உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். இந்த கலகத்திற்கு இராணுவத்தின் இதர பிரிவுகள் ஆதரவு அளித்ததா என்பது பற்றிய உடனடி குறிப்பு எதுவும் இல்லை. இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், பாஸூமை உடனடியாக விடுவிக்குமாறு அழைப்பு விடுத்தார்.