'அடுத்த பதிலடி அதிகபட்ச அளவில் இருக்கும்': இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் நலனுக்கு பங்கம் விளைவித்தால் அதற்கு உடனடி மற்றும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். "இஸ்ரேல் மற்றொரு சாகசத்தை செய்ய விரும்பினால், ஈரானின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டால், எங்கள் அடுத்த பதிலடி உடனடியாக இருக்கும். மேலும், அது அதிகபட்ச அளவில் இருக்கும்" என்று அமிரப்டோலாஹியன் NBC செய்தியிடம் கூறியுள்ளார். இஸ்ரேல் பெரிய தாக்குதலை நடத்தி ஈரானை தூண்டிவிடாவிட்டால் ஈரான் பதிலடி கொடுக்காது என்று அவர் தெளிவுபடுத்தினார். நேற்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவதை அடுத்து, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததது. சபதம் செய்தது போலவே ஈரான், இஸ்ரேல் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், நேற்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தனது நாட்டின் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் தனது நாடு கடுமையான பதிலடி கொடுக்கும் என்று ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த தாக்குதல் குறித்து பேசிய அமிரப்டோல்லாஹியன் இஸ்ரேலிய ஈடுபாட்டை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்.