Loading...
நேபாள பெருவெள்ளம்: காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க நேபாள அரசு நடவடிக்கை
மாயமானவர்களை உயிரிழந்தவர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பணியை நேபாள அரசு தொடங்கியுள்ளது

நேபாள பெருவெள்ளம்: காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க நேபாள அரசு நடவடிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2026
04:32 pm

செய்தி முன்னோட்டம்

திபெத் - நேபாள எல்லையில் ஏற்பட்ட பெரும் பனிப்பாறை சரிவால் போடே கோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை உயிரிழந்தவர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பணியை நேபாள அரசு தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ரசுவா, நுவாகோட் மற்றும் சித்வன் உள்ளிட்ட மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட இந்தப் பேரிடரில் 1,300-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டன. இருப்பினும், இதுவரை கண்டறியப்படாமல் இருக்கும் 5,000-க்கும் அதிகமானோரின் நிலை குறித்து எவ்விதத் தகவலும் இல்லாததால், அவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிப்பதற்கான நடைமுறைகளை நேபாளத்தின் தேசிய பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் முன்னெடுத்துள்ளது.

இந்தியர்கள்

பட்டியலில் இடம்பெற்றுள்ள 213 இந்திய சுற்றுலாப் பயணிகள்

நேபாள அரசால் வெளியிடப்பட்டுள்ள காணாமல் போனவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலில், இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்று மாயமான 213 பேரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதற்காக அவர்களின் பெயர்களுடன் கடவுச்சீட்டு எண் மற்றும் ஆதார் அட்டை எண் போன்ற அடையாள ஆவண விவரங்களும் அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலைச் சரிபார்த்து, அதில் ஏதேனும் விவரங்களைச் சேர்க்கவோ, நீக்கவோ அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளவோ வேண்டியிருந்தால், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உரிய ஆட்சேபனைகளை வரும் டிசம்பர் 2-ஆம் தேதிக்கு முன்னதாக தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக eoikathmandufloodsupport@gmail.com என்ற பிரத்யேக மின்னஞ்சல் முகவரியையோ அல்லது +9779851316807 என்ற உதவி அலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடைமுறை

இறப்புச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை

டிசம்பர் 2-ஆம் தேதி வரை பெறப்படும் ஆட்சேபனைகள் மற்றும் திருத்தங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

இந்தச் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன், மாயமானவர்களை உயிரிழந்தவர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அவர்களுக்கான இறப்புச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் நேபாள அரசு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அரசின் நிவாரண உதவிகள் மற்றும் காப்பீட்டுத் தொகைகளைப் பெறுவதற்கு வழிவகை ஏற்படும்.

ADVERTISEMENT