
அரசின் உத்தரவை மதிக்காததால் நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களுக்குத் தடை
செய்தி முன்னோட்டம்
நேபாள அரசு, உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை சுமார் 26 தளங்களைப் பாதிக்கிறது என்று நேபாள தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் உறுதிப்படுத்தினார். சமூக வலைதள நிறுவனங்கள் நேபாளத்தில் தங்கள் நிறுவனங்களைப் பதிவு செய்து, உள்ளூர் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று அரசு பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ்களுக்குப் பதிலளிக்காததால், நிறுவனங்களுக்கு ஏழு நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டது. அது முடிந்த நிலையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனுமதி
அரசின் விதிமுறைகளை பின்பற்றும் நிறுவனங்களுக்கு அனுமதி
இருப்பினும், டிக்டாக் மற்றும் வைபர் உள்ளிட்ட ஐந்து தளங்கள், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றிப் பதிவு செய்துள்ளதால், அவை தொடர்ந்து நேபாளத்தில் செயல்படும். இந்தத் தடைக்கு ஆதரவாக நேபாள உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஒரு தீர்ப்பும் அமைந்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆன்லைன் தளங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட அதிகார மையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய சட்டத்தின் மூலம், சமூக வலைதளங்களைப் பயனர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாக நிர்வகித்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. இந்த மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. இருப்பினும், மனித உரிமை அமைப்புகள் இந்தச் சட்டத்தை எதிர்த்து, இது கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என்றும் விமர்சித்துள்ளன.