நேபாளத்தில் இந்தியா நடத்தும் இசை திருவிழா: இருநாட்டு உறவின் 75வது ஆண்டு கொண்டாட்டம்
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான 75 ஆண்டுகால அசைக்க முடியா உறவைக் கொண்டாடும் வகையில், காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று(ஜன:20) "சங்கீத் சுகூன்" என்ற இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய இசைக்குழுவான கர்னாட்டிக் 2.0 மற்றும் நேபாள இசைக்குழு 'குடும்பா' ஆகியவை கலந்துகொண்டன. இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டு விழாவும் 74வது குடியரசு தினமும் இந்நிகழ்ச்சியில் கொண்டாடப்பட்டது. இதில் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல்(எ)பிரசந்தா, முன்னாள் பிரதமர்கள் கே.பி.சர்மா ஒலி, மாதவ் குமார் நேபால், டாக்டர் பாபுராம் பட்டராய், மூத்த தலைவர்கள் மஹந்தா தாக்கூர், ராஜேந்திர மஹதோ ஆகியோர் கலந்துகொண்டதாக நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இசையுடன் ஒன்றிணைந்த இரு நாடுகள்
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வெளியுறவு அமைச்சர் பிமலா ராய் பௌத்யால், தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் தாமோதர் பண்டாரி மற்றும் நேபாள ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் பிரபு ராம் ஷர்மா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கர்னாடிக் 2.0 இசைக்குழு பாரம்பரிய கர்நாடக ராகங்கள் மற்றும் ரெட்ரோ-பாலிவுட் பாடல்களின் கலவையை இந்த நிகழ்வின் போது இசைத்தது. அதே நேரத்தில் 'குடும்பா' இசைக்குழு நேபாளத்தின் பாரம்பரிய இசையை வாசித்து அசத்தியது. இன்று(ஜன:21) நேபாளத்தில் உள்ள லலித்பூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள படன் தர்பார் சதுக்கத்தில் கர்னாடிக் 2.0 மீண்டும் ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது