குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்த மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு
குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்த, மௌங்கி பாவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு இன்று(அக் 4) வழங்கப்பட்டது. நவீன LED தொலைக்காட்சித் திரைகள், சோலார் பேனல்கள் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் குவாண்டம் புள்ளிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவத்தில் கட்டிகளை அகற்ற அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு குவாண்டம் புள்ளிகள் உதவுகின்றன. சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(83.19 கோடி ரூபாய்) மதிப்புள்ள நோபல் பரிசு, ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
2023ஆம் ஆண்டின் இயற்பியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசுகள்
இந்த வாரம் வழங்கப்படும் மூன்றாவது நோபல் பரிசு இதுவாகும். இதற்கு முன், இயற்பியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசுகள் இந்த வாரம் வழங்கப்பட்டன. கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்தற்காக காடலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் என்ற இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு(2023) வழங்கப்பட்டது. பொருளின் எலக்ட்ரான் இயக்கவியல் தொடர்பான ஆய்வை மேற்கொண்டதற்காக பியர் அகோஸ்டினி, ஃபெரெங்க் க்ரவ்ஸ் மற்றும் ஆனி எல்'ஹுல்லியர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு(2023) வழங்கப்பட்டது. டைனமைட் கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்தின் பேரில் நோபல் பரிசு உருவாக்கப்பட்டது. அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் 1901ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.