யார் இந்த மொஜ்தபா கமேனி? கோடிக்கணக்கான சொத்துக்கள், சுவிஸ் வங்கி கணக்குகள், மர்மங்கள் நிறைந்த பின்னணி
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க -இஸ்ரேல் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, ஈரானின் அதிகார மையமாக அவரது மகன் மொஜ்தபா கமேனி உருவெடுத்துள்ளார். 56 வயதான இவர், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதவியிலும் இல்லையென்றாலும், திரைமறைவில் ஈரானை இயக்கும் சக்தியாக இருந்து வருகிறார். ஈரானின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரமிக்க 'Assembly of Experts' இந்த முடிவை எடுத்துள்ளதாக ஈரான் இன்டர்நேஷனல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் சக்திவாய்ந்த ராணுவ அமைப்பான புரட்சிகர காவல்படை (IRGC), மதகுருமார்களை கொண்ட நிபுணர்கள் குழுவிற்கு கடும் அழுத்தம் கொடுத்தே மொஜ்தபாவை தேர்ந்தெடுக்க வைத்ததாக கூறப்படுகிறது. அவரை பற்றி இதுவரை நமக்கு தெரிந்தவை.
பின்னணி
குடும்ப பின்னணி மற்றும் சோகம்
மொஜ்தபா, ஈரானின் செல்வாக்குமிக்க அரசியல்வாதி கோலம்-அலி ஹடாத்-ஆடெலின் மகள் சஹ்ரா ஹடாத்-ஆடெலை 2004-இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் நடந்த அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் மொஜ்தபாவின் மனைவி சஹ்ரா, அவரது தாய், சகோதரி மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த கமேனி குடும்பத்தின் மிகச்சில உறுப்பினர்களில் மொஜ்தபாவும் ஒருவர்.
சொத்து மதிப்பு
பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள்
மொஜ்தபா கமேனி மீது 2019-இல் அமெரிக்கா தடைகளை விதித்தது. இருப்பினும், அவர் உலகம் முழுவதும் மிகப்பெரிய சொத்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளதாக Bloomberg அறிக்கை கூறுகிறது. லண்டனில் மட்டும் சுமார் $138 மில்லியன் (சுமார் ரூ.1,150 கோடி) மதிப்பிலான ஆடம்பர பங்களாக்கள் இவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் பல பில்லியன் டாலர்களை இவர் ரகசியமாக சேமித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய சந்தைகளில் இவர் மறைமுகமாக பெரும் முதலீடுகளை செய்துள்ளார். ராணுவ அனுபவம் கொண்ட மொஜ்தபா, ஒரு நடுத்தர நிலை மதகுருவாக இருந்தாலும், ஈரானின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான நபராக மாறியுள்ளார்.