LOADING...
ஈரானின் 'சுப்ரீம் லீடர்'தந்தை இடத்திற்கு வந்த மகன்; ராணுவத்தின் நெருக்கடியால் மொஜ்தபா கமேனி தேர்வு?
மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

ஈரானின் 'சுப்ரீம் லீடர்'தந்தை இடத்திற்கு வந்த மகன்; ராணுவத்தின் நெருக்கடியால் மொஜ்தபா கமேனி தேர்வு?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2026
08:03 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனியின் இடத்தை நிரப்ப, அவரது இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈரானின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரமிக்க 'Assembly of Experts' இந்த முடிவை எடுத்துள்ளதாக ஈரான் இன்டர்நேஷனல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் சக்திவாய்ந்த ராணுவ அமைப்பான புரட்சிகர காவல்படை (IRGC), மதகுருமார்களை கொண்ட நிபுணர்கள் குழுவிற்கு கடும் அழுத்தம் கொடுத்தே மொஜ்தபாவை தேர்ந்தெடுக்க வைத்ததாக கூறப்படுகிறது. போர்ச் சூழலில் நாட்டின் பாதுகாப்பையும், ராணுவக் கட்டுப்பாட்டையும் உறுதி செய்ய மொஜ்தபாவே சரியான நபர் என ராணுவம் கருதுகிறது.

முக்கியத்துவம்

வாரிசு அரசியல் சர்ச்சை

ஈரான் அரசு நீண்டகாலமாக முடியாட்சியையும் வாரிசு அரசியலையும் எதிர்த்து வந்துள்ளது. தற்போது தந்தையை தொடர்ந்து மகனே ஆட்சிக்கு வந்திருப்பது, அந்நாட்டின் கொள்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. உச்ச தலைவர் பதவி என்பது ஈரானின் மிக உயர்ந்த பதவியாகும். ராணுவம், வெளியுறவு கொள்கை மற்றும் நீதித்துறை என அனைத்து முக்கிய விவகாரங்களிலும் இவரே இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்.

விவரங்கள்

யார் இந்த மொஜ்தபா?

மொஜ்தபா கமேனி ஒரு நடுத்தர நிலை மதகுரு ஆவார். இவர் ஈரான்-ஈராக் போரில் பங்கேற்றவர். கடந்த பல ஆண்டுகளாக தனது தந்தையின் அலுவலகத்தை நிர்வகித்து வந்த இவர், திரைமறைவில் ஈரானின் முக்கிய அதிகார மையமாகச் செயல்பட்டு வந்தார். குறிப்பாக, புரட்சிகர காவல்படையுடன் இவர் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளார். கமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானில் பெரும் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருந்த நிலையில், மொஜ்தபாவின் நியமனம் அந்நாட்டின் அடுத்தகட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement