துருக்கிக்கு வேலை விஷயமாக சென்றிருந்த இந்தியர் ஒருவர் உயிரிழப்பு
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் காணாமல் போன இந்தியர் ஒருவர் இன்று(பிப் 11) உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சகம்(MEA) இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. துருக்கியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 10 பேர் தொலைதூர பகுதிகளில் சிக்கியுள்ளதாகவும், ஆனால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் MEAஇன் செயலாளர்(மேற்கு) சஞ்சய் வர்மா புதன்கிழமை(பிப் 8) தெரிவித்திருந்தார். உத்தரகாண்டின் கோட்வாரை சொந்த ஊராக கொண்ட கவுட் என்பவர், பெங்களூரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும், அவர் துருக்கிக்கு வேலை விஷயமாக சென்றிந்தார்.
டாட்டூவால் இந்தியரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதா
"கடந்த இரண்டு நாட்களாக அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. நாங்கள் அவருடைய குடும்பத்தினருடனும், பெங்களூருவில் இருக்கும் அவர் பணிபுரியும் நிறுவனத்துடனும் தொடர்பில் இருக்கிறோம்" என்று வர்மா கூறி இருந்தார். இந்நிலையில், காணாமல் போயிருந்த அவரது உடல் கிடைத்திருப்பதாகவும், அவரது கையில் இருந்த டாட்டூவை வைத்து அவரது குடும்பத்தினர் அவர் உடலை அடையாளம் கண்டதாகவும் கூறப்படுகிறது. இதை சீக்கிரமே இந்திய வெளியுறவு அமைச்சகத்தால்(MEA) உறுதி செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 25,000ஐ தொட்டுள்ளது. இந்திய மீட்பு படையினரும் இந்திய நாய் படையும் இன்னும் நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.