மெக்சிகோவில் பயங்கரம்! 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் இடிந்து 2 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
மெக்சிகோவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இன்று (ஜனவரி 3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெக்சிகோவின் தெற்கு மாநிலமான குரேரோவில் உள்ள சான் மார்கோஸ் நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது. இது புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அகாபுல்கோவுக்கு மிக அருகாமையில் உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுமார் 500க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
பாதிப்புகள்
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்
குரேரோ மாநிலத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மெக்சிகோ சிட்டியில் நிலநடுக்க அலாரம் கேட்டவுடன் கட்டிடத்தை விட்டு வெளியேற முயன்ற ஒரு நபர், மருத்துவ அவசரநிலை மற்றும் கீழே விழுந்ததில் உயிரிழந்தார். மாநிலத் தலைநகரான சில்பான்சிங்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் கட்டமைப்பு பலத்த சேதமடைந்தது. இதன் காரணமாக அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அகாபுல்கோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அகாபுல்கோவிற்குத் தென்கிழக்கே உள்ள சில பகுதிகளில் தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தாக்கம்
நிலநடுக்கத்தின் தாக்கம்
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் புத்தாண்டின் தனது முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்திக் கொண்டிருந்தபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க அலாரம் ஒலித்தவுடன் செய்தியாளர் சந்திப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடரப்பட்டது. மெக்சிகோ சிட்டி மற்றும் அகாபுல்கோ போன்ற நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டவுடன் பொதுமக்கள் அச்சத்தில் வீதிக்கு வந்தனர். மெக்சிகோ பசிபிக் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம் என்றாலும், புத்தாண்டுத் தொடக்கத்திலேயே ஏற்பட்டுள்ள இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களைப் பீதியடையச் செய்துள்ளது.