
வேற்றுகிரகவாசிகளின் இருப்பை நிரூபிக்க புதிய ஆதாரங்களைக் கொண்டு வந்திருக்கும் மெக்ஸிக பத்திரிகையாளர்
செய்தி முன்னோட்டம்
பூமியில் வேற்றுகிரகவாசிகள் அவ்வப்போது பறக்கும் தட்டுகளில் வந்து செல்வதாக பல்வேறு கதைகள் உலகம் முழுவதும் உலா வருகின்றன. சிலர், தாங்கள் பறக்கும் தட்டைப் பார்த்ததாகக் கூட கூறியிருக்கிறார்கள்.
அமெரிக்க அரசும் பறக்கும் தட்டு உண்மை தானா என சில நிகழ்வுகளின் போது ஆய்வுகளிலும் இறங்கியிருக்கிறது.
இந்நிலையில், வேற்றுகிரகவாசிகள் இருப்பதாகக் கூறி இரண்டு இறந்த உடல்களை மெக்ஸிகோவில் சட்ட வல்லுநர்கள் முன்னிலையில் சாட்சியமாக அளித்திருக்கிறார் அந்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரும், பறக்கும் தட்டு ஆர்வலருமான ஜெய்மி மௌஸான்.
முன்னதாக, இதே போல் வேற்றுகிரகவாசிகளின் இருப்பை நிரூபிப்பதாகக் கூறி பல்வேறு சாட்சியங்களைக் கொணர்ந்திருக்கிறார் மௌஸான். ஆனால், அவை அனைத்தும் பூமியைச் சேர்ந்தவையே எனப் பின்னர் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
அறிவியல்
புதிய ஆதாரங்களைத் திரட்டிய மெக்ஸிக பத்திரிகையாளர்:
தற்போது மீண்டும் வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் எனக் கூறி இரண்டு உடல்களை ஆதாரமாகக் கொண்டு வந்திருக்கிறார் ஜெய்மி மௌஸான்.
நீளமான தலை, மூன்று விரல்களுடன் கூடிய கைகள் மற்றும் சிறிய உடல் என அனிமேஷனில் வேற்றுகிரகவாசிகளை எப்படிக் காண்பிப்பார்களோ அதுபோலவே வெள்ளை நிறத்தில் ஜெய்மி கொண்டு வந்த இரு உடல்களும் இருக்கின்றன.
மெக்ஸிக பத்திரிகையாளர் கொண்டு வந்திருக்கும் இரண்டு உடல்களும், பெரு நாட்டில் உள்ள நஸ்கா கோடுகளின் அருகில் 2017ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
மெக்ஸிகோவைச் சேர்ந்த தேசிய தன்னார்வ பல்கலைக்கழகமானது, ஜெய்மி ஆதாரமாகக் கொணர்ந்திருக்கும் உடல்களைப் பரிசோதனை செய்து அவை 1000 ஆண்டுகளுக்கு பழமையானது என தெரிவித்திருக்கிறது.
அறிவியல்
உண்மையில் வேற்றுகிரகவாசிகளின் உயிரற்ற உடல்களா அவை?
மெக்ஸிக கடற்படை அறிவியல் மையத்தின் இயக்குநர் ஜோஸே டீ ஜீஸஸ் ஸால்கா பெனிட்டெஸ், மேற்கூறிய உடல்களில் எக்ஸ்ரே, 3D ரீகண்ஸ்ட்ரக்ஸன் மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகள் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
பரிசோதனையின் முடிவில், அந்த இரு உடல்களும் மனித உடல்களாக இருக்க வாய்ப்புகளே இல்லை எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.
முன்னதாக இதே போன்று ஐந்து சிறிய உடல்கள் பெரு நாட்டில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பின்னர் ஆய்வு செய்த போது, அவை பதப்படுத்தப்பட்ட புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள் எனக் கண்டறியப்பட்டன.
வேற்றுகிரகவாசிகளின் இருப்பை நிரூபிக்க முயற்சி செய்து வரும் மெக்சிக பத்திரிகையாளரின் மற்றொரு முயற்சி இது எனவும் பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.