'மே 10-ம் தேதிக்கு மேல் இந்திய அதிகாரிகள் யாரும் மாலத்தீவில் இருக்க மாட்டார்கள்': மாலத்தீவு அதிபர் உறுதி
இலவச இராணுவ உதவியை மாலத்தீவுக்கு வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா நேற்று கையெழுத்திட்டது. இந்நிலையில், சாதாரண உடையில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் உட்பட எந்தவொரு இந்திய இராணுவ அதிகாரிகளும் மே 10-ம் தேதிக்கு மேல் மாலத்தீவுக்குள் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இன்று தெரிவித்துள்ளார். இந்திய இராணுவ வீரர்களை மார்ச் 10ஆம் தேதிக்குள் திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஏற்கனவே ஒப்புக்கொண்டன. அதனை தொடர்ந்து, மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களுள் ஒன்றில் பொறுப்பேற்க இந்திய சிவில் குழு ஒரு வாரத்திற்கு முன் மாலத்தீவை அடைந்தது. இராணுவ அதிகாரிகள் இருக்கக்கூடாது என்று கூறியவுடன் சிவில் குழுவை இந்தியா அனுப்பியது.
"மே 10 ஆம் தேதி நம் நாட்டில் இந்தியப் படைகள் இருக்காது": மாலத்தீவு அதிபர்
அது நடந்து ஒரு வாரத்திற்குள் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இந்த கருத்தை தெரிவித்துள்ளார். "அவர்கள்[இந்திய இராணுவம்] வெளியேறவில்லை, அவர்கள் தங்கள் சீருடைகளை சிவிலியன் உடையாக மாற்றிவிட்டுத் திரும்பி வர நினைக்கிறார்கள். நம் இதயங்களில் சந்தேகங்களைத் தூண்டும், பொய்களைப் பரப்பும் இதுபோன்ற விஷயங்களில் நாம் ஈடுபடக்கூடாது," என்று அதிபர் முகமது முய்ஸு கூறியுள்ளார். "மே 10 ஆம் தேதி நம் நாட்டில் இந்தியப் படைகள் இருக்காது. சீருடையிலும் இல்லை, சிவில் உடையிலும் இல்லை. இந்திய ராணுவம் எந்த வகை ஆடையிலும் இந்த நாட்டில் வசிக்காது. இதை நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.