மாலத்தீவு அதிபர் முய்சு மீது ஊழல் குற்றச்சாட்டுகள்
2018 ஆம் ஆண்டு முதல் அதிபர் முகமது முய்சுவின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து, அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. மாலத்தீவில் நாடாளுமன்றதேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மஜ்லிஸிற்கான தேர்தல்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. மேலும் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) மற்றும் முய்ஸுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) ஆகியவற்றுக்கு இடையேயான குற்றச்சாட்டு பரிமாற்றங்களால் சூழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதிபர் முகமது முய்சுவின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த உளவுத்துறை தகவல்கள் கடந்த திங்கள்கிழமை 'ஹாசன் குருசி' என்ற அநாமதேய ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியிடப்பட்டது.
அரசியல் புயலை உருவாக்கிய குற்றச்சாட்டுகள்
மாலத்தீவு நாணய ஆணையத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU) மற்றும் மாலத்தீவு போலீஸ் சேவை ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் உட்பட உளவுத்துறை அறிக்கைகள் கடந்த திங்கள்கிழமை கசிந்தன. அவை அதிபர் முய்சுவை ஊழலுடன் தொடர்புபடுத்தியதாகக் கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு தேதியிட்ட இந்த உளவுத்துறை அறிக்கைகளில், அதிபர் முய்ஸுவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செய்திருக்கும் பணப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதை கூறுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் விரைவில் அரசியல் புயலை உருவாக்கியது. பல்வேறு சமூக ஊடக சேனல்களில் பலர் இதை விமர்சிக்க தொடங்கினர். எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) மற்றும் மக்கள் தேசிய முன்னணி (பிஎன்எஃப்) இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளன.