2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு
2024ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மிகவும் வயதான அமெரிக்க அதிபர் என்று பெயரெடுத்த பைடன், தனது 80 வயதில் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே தனது வேலை என்று இந்த வீடியோவில் அவர் கூறியிருக்கிறார். "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் அதிபர் பதவிக்கு போட்டியிட்டபோது, அமெரிக்காவின் ஆன்மாவுக்கான போரில் நாம் இருக்கிறோம் என்று நான் கூறினேன். இப்போதும் அது மாறிவிடவில்லை. நிம்மதியாக இருக்க வேண்டிய நேரம் இதுவல்ல. அதனால்தான் நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன்." என்று பைடன் தெரிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சி தீவிரவாதிகளை போல் செயல்படுகிறது: பைடன்
பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பைக் குறைத்தல், புத்தகங்களைத் தடை செய்தல் போன்ற முயற்சிகளை எடுத்து வரும் குடியரசுக் கட்சி அமெரிக்க சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று பைடன் தெரிவித்துள்ளார். மேலும், 'MAGA' என்ற முழக்கங்களை எழுப்பும் குடியரசுக் கட்சி தீவிரவாதிகளை போல் செயல்படுகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். MAGA என்பது ட்ரம்பின் "மேக் அமெரிக்கா கிரேட் அகைன்" அரசியல் முழக்கத்தின் சுருக்கமாகும். 2024ஆம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடனுக்கு எதிராக டொனால்டு டிரம்ப் போட்டியிட வாய்ப்பிருக்கிறது.