ஜனவரி 2024 முதல் அனைவருக்கும் இலவச விசா வழங்கும் கென்யா
அடுத்தாண்டு முதல் இலவச விசா வழங்கும் நாடுகள் பட்டியலில், கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவும் இணைந்துள்ளது. கென்யாவின் அதிபர் வில்லியம் ருடோ சில நாட்களுக்கு முன்பு, கென்யாவிற்கு விடுமுறைக்கு வருபவர்களுக்கு ஜனவரி முதல் விசா தேவையில்லை என்று அறிவித்தார். இதன் மூலம் மசாய் மாராவின் கம்பீரமான சிங்கங்கள், உயரமான ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் அழகான விண்மீன்களை பார்ப்பது மிகவும் எளிதாகிறது. ஜனவரி மாதம் முதல் கென்யாவிற்கு பயணம் மேற்கொள்பவர்கள் விசாவிற்கு பதிலாக, அந்நாட்டு அரசாங்கம் வழங்கும் 'மின்னணு பயண அங்கீகாரம்' பெற்றால் போதுமானது. இதற்கு முன்னர் இந்தியர்கள், கென்யாவிற்கு செல்ல ₹6,000 செலவில், மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும், ஒரு முறை பயணிக்கும் விசா எடுக்க வேண்டியிருந்தது.
விசா சுமையை குறைத்த கென்யா
"கென்யாவிற்கு விசாவிற்கு விண்ணப்பிக்கும் சுமையை உலகின் எந்த மூலையிலிருந்தும் வரும் எந்த நபரும் சுமக்க வேண்டிய அவசியமில்லை" என கென்யா, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற 60வது ஆண்டு கொண்டாட்டத்தில் ருடோ தெரிவித்தார். மேலும், ருடோ ஆப்பிரிக்கக் கண்டத்திற்குள் விசா இல்லாத பயணத்திற்கு அனுமதிக்க வேண்டுமென நீண்ட காலமாக வாதிட்டு வந்தார். இந்நிலையின் தற்போது உலகம் முழுவதிலிருந்தும், கென்யாவுக்கு பயணிப்பவர்கள் விசா எடுக்க தேவையில்லை என அறிவித்துள்ளார். இந்த பரந்த விசா இல்லாத கொள்கைக்கு முன்னதாக, கென்யா ஏற்கனவே இந்தோனேசிய நாட்டினருக்கான விசா தேவைகளை நீக்கியது குறிப்பிடத்தக்கது.