இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து வியட்நாமில் பேசிய அதிபர் ஜோ பைடன்
இந்திய-அமெரிக்க கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துத்துறையாடியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும். புது டெல்லியில் ஜி20 உச்சிமாநாட்டை நடத்தியதற்கும் அதற்கு பிரதமர் மோடி தலைமை தங்கியதற்கும் அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்தார். மனித உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடியிடம் ஜோ பைடன் எடுத்துரைத்ததாக கூறினார். அமெரிக்க அதிபராகிய பிறகு இந்தியாவிற்கு முதல்முறையாக வந்த அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியுடன் பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அந்த பேச்சு வார்த்தையின் போது, இருதரப்பு முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மையை "ஆழப்படுத்தவும் பன்முகப்படுத்தவும்" இருவரும் உறுதியளித்தனர். இந்நிலையில், தற்போது வியட்நாம் சென்றிருக்கும் அதிபர் பைடன் அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார்.
வியட்நாம் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் ஜோ பைடன் பேசியதாவது:
பிரதமர் மோடியின் தலைமை மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி. ஜி20 மாநாட்டை நடத்தியதற்காகவும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த ஜூன் மாதம் வெள்ளை மாளிகைக்கு பிரதமர் வருகை தந்திருந்த போது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டுறவை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து நானும் அவரும் கணிசமான விவாதங்களை நடத்தியுள்ளோம். நான் எப்போதும் செய்வது போல, மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், வலுவான மற்றும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதில் சிவில் சமூகம் மற்றும் சுதந்திரமான பத்திரிகையின் முக்கிய பங்கையும் நான் அவரிடம் எடுத்துரைத்தேன். மத்திய கிழக்கு நாடுகள், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன் இந்தியாவை இணைக்கும் புதிய வழித்தடம், மாற்றத்தக்க பொருளாதார முதலீட்டிற்கான சொல்லொணா வாய்ப்புகளை உருவாக்கும். என்று தெரிவித்துள்ளார்.