சீன உளவுத்துறையுடனான தொடர்பை ஒப்புக்கொண்டார் என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங்; விசாரணைக்கு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
என்விடியா நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜென்சன் ஹுவாங், சீன உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண் தொழிலதிபருடன் தமக்கு இருந்த தனிப்பட்ட தொடர்பை ஒப்புக் கொண்டுள்ளார். நிறுவன ஊழியர்கள் மற்றும் தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில், தனது தவறான நடவடிக்கை குடும்பத்தையும் நிறுவனத்தின் நம்பிக்கையையும் பாதித்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். தனது செயலுக்கு எவ்விதச் சாக்கும் சொல்ல முடியாது என்றும், நிறுவனத்தின் நம்பிக்கையை மீண்டும் பெற உழைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள்
ஆலிஸ் ஹுவாங் மற்றும் மெகாஸ்பீட் நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள்
சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் மெகாஸ்பீட் என்ற டேட்டா சென்டர் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆலிஸ் ஹுவாங், சீனாவின் வெளியுறவு பாதுகாப்பு அமைப்பிற்காக உளவு பார்த்ததாக அமெரிக்க உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
மெகாஸ்பீட் நிறுவனம் $4.8 பில்லியன் மதிப்பிலான என்விடியா ஏஐ சிப்களைப் பெற்றுள்ளதால், அமெரிக்காவின் ஏற்றுமதித் தடைகளை மீறி இந்த சிப்கள் சீனாவிற்கு திருப்பி விடப்பட்டதா என்ற கோணத்திலும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
விசாரணை
என்விடியா இயக்குனர் குழுவின் சுயாதீன விசாரணை மற்றும் பாதுகாப்பு உறுதிப்பாடு
உளவுத்துறை தொடர்பு விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, என்விடியா நிறுவனத்தின் இயக்குனர் குழு வெளிப்புற வழக்கறிஞர்கள் மற்றும் சுயாதீன இயக்குநர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நிறுவனத்தின் வணிக ரகசியங்களோ அல்லது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்போ தற்சமயம் வரை சமரசம் செய்யப்படவில்லை என்று என்விடியா அறிவித்துள்ளது.
இருப்பினும், உலகளவில் மிகப்பெரிய ஏஐ சிப் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ வெளிநாட்டு உளவுத்துறையின் இலக்காக மாற்றப்பட்டாரா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை தாக்கம்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சந்தை தாக்கம்
அமெரிக்க காங்கிரஸின் மூத்த குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஜென்சன் ஹுவாங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதேவேளையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜென்சன் ஹுவாங்கை ஒரு "கௌரவமான நபர்" என்று வர்ணித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சைகள் மற்றும் பங்குச் சந்தையில் நிலவும் ஏஐ வீழ்ச்சி காரணமாக $4.5 டிரில்லியன் சந்தை மதிப்பு கொண்ட என்விடியாவின் பங்குகள் லேசான சரிவை சந்தித்துள்ளன.