இளவரசர் ஆண்ட்ரு முதல் பில் கிளின்டன் வரை: ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரபலங்கள்
அமெரிக்காவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கூட்டாளிகளை அடையாளம் காணும் ஏராளமான நீதிமன்ற ஆவணங்கள், புதன்கிழமை பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், மைக்கேல் ஜாக்சன் மற்றும் டேவிட் காப்பர்ஃபீல்ட் ஆகியோரின் பெயர்கள் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்ஸ்டீன் மனைவி கிஸ்லைன் மேக்ஸ்வெல் தொடர்பான வழக்கின் ஒரு பகுதியாக, பதிவுகளை வெளியிட அமெரிக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் இது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை நூறுக்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் வெளியாகியுள்ள நிலையில், வரக்கூடிய நாட்களில் மேலும் அதிகப்படியான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவணத்தில் ஸ்டீபன் ஹாக்கிங், ஜார்ஜ் லூகாஸ் பெயர்கள்
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வெளியாகியுள்ள ஆவணங்களில், மறைந்த புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் ஆகியோரின் பெயர்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்களான டேவிட் முல்லன், டோனி லியோன்ஸ்(ஹங்கர் கேம்ஸ் 2 திரைப்படத்தின் இசையமைப்பாளர்), ஜார்ஜ் லூகாஸ் ஆகியோரது பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன. இவர்கள் உட்பட அமெரிக்க மாகாணங்களின் முன்னாள் கவர்னர்கள், சில வெளிநாட்டு பிரபலங்கள் உட்பட 150 நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆவணத்தில் இடம் பெற்றவர்கள் அனைவரும், சட்டபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்?
பிரபலங்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் மற்றும் கல்வி நட்சத்திரங்களுடன் தொடர்பில் இருந்ததற்காக அறியப்பட்ட கோடீஸ்வரரான எப்ஸ்டீன், 14 வயது சிறுமிக்கு உடலுறவுக்காக பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், 2005ம் ஆண்டில் புளோரிடாவின் பாம் கடற்கரையில் கைது செய்யப்பட்டார். டஜனுக்கும் மேற்பட்ட சிறுமிகள் இதே போன்று குற்றம்சாட்டிய நிலையில், ஒரே ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டு 2008ல், 13 மாதங்கள் சிறை தண்டனை இவருக்கு விதிக்கப்பட்டது. சில வருடங்களுக்கு பிறகு, வெளியான மியாமி ஹெரால்டின் செய்தியில் பல சிறுமிகள் எப்ஸ்டீன் மீது குற்றம் சாட்டியிருந்தனர். அதனை தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் வழக்கறிஞர்கள் 2019ல் எப்ஸ்டீன் மீது பாலியல் தொழிலில் சிறுமிகளை ஈடுபடுத்திய குற்றச்சாட்டுகளை சுமத்தினர். விசாரணைக்காக சிறையில் இருந்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டார்.
நீதிமன்ற ஆவணங்கள் என்ன?
தற்போது வெளியிடப்படும் ஆவணங்கள், எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வர்ஜீனியா கியூஃப்ரே 2015ல் அவரது மனைவி மேக்ஸ்வெல்லுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கின் ஒரு பகுதியாகும். புளோரிடா, நியூயார்க், அமெரிக்க விர்ஜின் தீவுகள் மற்றும் நியூ மெக்சிகோ ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில், எப்ஸ்டீனினால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த டஜனுக்கும் மேற்பட்டவர்களில் வர்ஜீனியா கியூஃப்ரே ஒருவர் ஆவார். மேக்ஸ்வெல்லுக்கு எதிரான கியூஃப்ரேயின் வழக்கு 2017ல் தீர்க்கப்பட்டது, ஆனால் மியாமி ஹெரால்ட் பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்கள் உள்ளிட்டவை அடங்கிய முத்திரையிடப்பட்ட சில நீதிமன்ற ஆவணங்களை அணுகியது. 2019ல் நீதிமன்றத்தால் சுமார் 2,000 பக்கங்கள் வெளியிடப்பட்டன. கூடுதல் ஆவணங்கள் 2020, 2021 மற்றும் 2022ல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு ஆவணம் வெளிவந்துள்ளது.