கார்ட்டூன் பொம்மையுடன் திருமணம்; ஆறாவது திருமண நாளைக் கொண்டாடிய ஜப்பான் நபர்
2018 ஆம் ஆண்டில் ஒரு கற்பனைக் கார்ட்டூன் கதாபாத்திரத்தை மணந்த ஜப்பானியர் ஒருவர், இந்த ஆண்டு அவருடன் தனது ஆறாவது திருமண நாளைக் கொண்டாடுகிறார். 41 வயதான அகிஹிகோ கோண்டோ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 4ஆம் தேதி பாடும் குரல் சின்தசைசர் மென்பொருளான ஹட்சுனே மிகுவை மணந்தார். பெரிய நீல நிற போனிடெயில்களுடன் கூடிய 16 வயது பாப் பாடகரின் கார்ட்டூன் கதாபாத்திரமாக இந்த மென்பொருள் உருவகப்படுத்தப்படுகிறது. இன்ஸ்டாகிராமில், கோண்டோ அவர்களின் ஆண்டுவிழாவிற்கு வாங்கிய கேக்கின் படத்தைப் பகிர்ந்துள்ளார், "எனக்கு மிகுவை மிகவும் பிடிக்கும். ஆறு வருட நிறைவு வாழ்த்துக்கள்" என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
கார்ட்டூன் மீது காதல்
கோண்டோ ஜப்பானிய ஊடகத்திடம் இதுகுறித்து கூறுகையில், அவர் முன்பு பெண்கள் மீது ஆர்வம் கொண்டிருந்ததாகவும், ஆனால் தனது காதலை வெளிப்படுத்திய பிறகு ஏழு முறை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அனிம் மற்றும் மங்கா மீது ஆர்வம் கொண்டிருந்ததாக அவரை பலர் ஏளனப்படுத்தியதாகவும், இதனால் மனரீதியான சிக்கலை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார். இதன் பிறகு, 2007ஆம் ஆண்டில், மிகுவின் பாத்திரம் ஒரு குரலாய் வெளியிடப்பட்டது மற்றும் கோண்டோ அதன்மீது காதலில் விழுந்தார். இதற்கிடையே, வேலையிலும் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்ட அவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் டிஸ்ஆர்டர் இருப்பது கண்டறியப்பட்டது. இது மன அழுத்தம் நிறைந்த நிகழ்வுக்குப் பிறகு ஏற்படும் வலுவான உணர்ச்சி மற்றும் மோசமான நடத்தை அறிகுறிகள் ஆகும்.
உயிரைக் காப்பாற்றிய கார்ட்டூனுடன் திருமணம்
இந்த சிக்கலில் இருந்து விடுபட மிகுவின் குரல் அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது. மேலும், மிகு சமூகத்துடன் மீண்டும் இணைவதற்கு உதவியதாகவும், அவர் தனது உயிரைக் காப்பாற்றியதாகவும் கோண்டோ கூறினார். ஒரு ஹாலோகிராம் சாதனம் மூலம் கோண்டோ தனது காதலை முன்மொழிந்துள்ளார். இது பயனர்கள் கதாபாத்திரத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் என்றும், மிகு தனது திருமண திட்டத்தை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். இதையடுத்து 2018ஆம் ஆண்டில், அவர் டோக்கியோ தேவாலயத்தில் 2 மில்லியன் யென்னுக்கு திருமண விழாவை நடத்தி மிகுவை மணந்தார்.
ஜப்பானில் அதிகரிக்கும் கற்பனை பாலுறவு ஆர்வலர்கள்
ஜப்பனீஸ் அசோசியேஷன் ஃபார் செக்ஸ் எஜுகேஷன் நடத்திய ஆய்வில், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில் 10% க்கும் அதிகமானோர் இதுபோன்ற கற்பனைக் கதாபாத்திரங்களில் காதல் உணர்வுகளை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர். அவரது பாலியல் நோக்குநிலையை சமூகத்தில் இருந்து ஏற்றுக்கொள்ள, அவர் தன்னைப் போன்ற பிறருக்கு உதவுவதற்காக கடந்த ஆண்டு தனது சகாக்களுடன் இதற்கென தனியாக கற்பனையான பாலுறவுக்கான சங்கத்தை நிறுவினார். உடல் ரீதியாக மிகுவை தனது வாழ்க்கையில் வைத்திருக்க, அவர் மிகு போல் வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய பொம்மையை வைத்துள்ளார். இருப்பினும், மிகு உடனான தனது உறவு நீண்ட காலம் நீடிக்கும் என்று நினைக்கவில்லை என்றும் கோண்டோ தெரிவித்துள்ளார்.