Loading...
ஜப்பானின் நிலநடுக்கத்தால் உயிரிழப்பு 13 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தல்
இந்த நிலநடுக்கத்தால் இயான் வணிக வளாகத்தில் ரிவாயு கசிவு காரணமாக பயங்கர வெடிப்பு ஏற்பட்டது

ஜப்பானின் நிலநடுக்கத்தால் உயிரிழப்பு 13 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தல்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 29, 2026
07:35 am

செய்தி முன்னோட்டம்

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தை உலுக்கிய 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக பிரதமர் சனே தகாய்ச்சி தெரிவித்துள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குமாமோட்டோவில் பலத்த சேதம் ஏற்பட்டது. கஷிமா நகரில் உள்ள இயான் வணிக வளாகத்தில், வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்ட பிறகு, எரிவாயு கசிவு காரணமாக பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. இதில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருகின்றனர்.

விபத்து

காகித ஆலை இடிந்து விபத்து மற்றும் கட்டாய வெளியேற்றம்

யட்சுஷிரோ பகுதியில் உள்ள நிப்பான் காகித ஆலை நிறுவனத்தின் புகைபோக்கி பகுதி பகுதியளவாக இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்களை பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

நிலநடுக்கத்தை தொடர்ந்து வலுவான பின் அதிர்வுகள் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், சுமார் 2,60,000 மக்கள் தற்காலிக முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதிலும், பல மருத்துவமனைகள் தொடர்ந்து காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ஜப்பான் ராணுவத்தைச் சேர்ந்த 3,600 வீரர்கள் மற்றும் 20 விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் அதிவேக ஷிங்கன்சென் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன; நெடுஞ்சாலைகளில் பெரிய பிளவுகள் ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

முன்னணி நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலை செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

ADVERTISEMENT