கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு?
டோக்கியோவில் இருந்து கிராமப்புறங்களில் குடியேறுபவர்களுக்கு ஜப்பான் அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அதிக வேலை பளுவாலும் விலைவாசி உயர்வாலும் பெரும்பாலான ஜப்பானிய மக்கள், குழந்தைகள் பெற்றுக்கொள்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். இதனால், ஜப்பானில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்காமல் தேக்கத்தில் இருப்பதாக கடந்த சில வருடங்களின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதை, சரிசெய்ய ஜப்பான் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சில வாரங்களுக்கு முன், குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு ஜப்பான் உதவிதொகை வழங்குவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இப்படி மக்கள் தொகையின் வீழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் நாட்டில் உள்ள 28%(அதாவது 3.5 கோடி பேர்) மக்கள் ஜப்பான் தலைநகரான டோக்கியாவில் தான் வசிக்கிறார்கள். இதனால் டோக்கியாவில் மக்கள் நெருக்கடி அதிகரித்திருக்கிறது.
மக்கள் நெருக்கடியால் திணறும் டோக்கியோ!
மேலும், இளைய தலைமுறையினர் எல்லாம் வேலை தேடி டோக்கியோ நகரத்திற்கு வந்துவிடுவதால், கிராமபுறங்களில், முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாவும் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கிறது. இதனால், ஜப்பான் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையைத் தீர்த்து டோகியோவில் இருக்கும் மக்கள் நெருக்கடியை குறைக்க, ஜப்பான் அரசு கிராமப்புறங்களுக்கு இடம்பெயர்பவர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது. இதன் படி, கிராமங்களுக்கு இடம் பெயரும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு மில்லியன் யென்(6.36 லட்ச ரூபாய்) உதவி தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், கிராமங்களில் தொழில் தொடங்குவதற்கு தனியாக மானியம் வழங்கப்படும் என்றும் ஜப்பான் அரசு கூறி இருக்கிறது. இதுவரை இந்த திட்டத்தால் பயனடைந்தவர்கள்: 2021ஆம் ஆண்டு- 71 பேர் 2022ஆம் ஆண்டு- 1,184 பேர்