Loading...
மத்திய ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு, 22 பேர் படுகாயம்
மத்திய ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மத்திய ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு, 22 பேர் படுகாயம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 08, 2026
12:24 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பலமாக அதிர்ந்ததை அடுத்து, மக்கள் பீதியடைந்து வீதிகளை நோக்கிப் பதறியடித்து ஓடினர். ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் (JMA) தகவல்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:04 மணியளவில் ஷிஸுவோகா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 40 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. நல்வாய்ப்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

சேதம்

22 பேர் படுகாயம்: கடைகளின் கண்ணாடிகள் நொறுங்கின

நிலநடுக்கத்தின் போது கட்டடங்களை விட்டு வெளியேற முயன்ற போது மற்றும் இடிபாடுகள் விழுந்ததில் குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளதாக பிந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் 7 நிலைகளைக் கொண்ட நிலநடுக்க தீவிர அளவுகோலில், ஐச்சி மாகாணத்தில் உள்ள சிடா நகரம் Upper 5 அளவிலான அதிர்வைச் சந்தித்தது.

மேலும் நகானோ மற்றும் கிஃபு ஆகிய பக்கத்து மாகாணங்களிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.

நிலநடுக்க அதிர்வால் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் முன் பக்கக் கண்ணாடிகள் உடைந்து தெருக்களில் சிதறின. புத்தகக் கடைகளில் அடுக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அலமாரிகளில் இருந்து கீழே விழுந்து சிதறின.

புல்லட் ரயில்கள்

புல்லட் ரயில்களின் வேகம் குறைப்பு & சமூக வலைதள வீடியோக்கள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இயக்கப்படும் அதிவேக புல்லட் ரயில்கள் தண்டவாள சேதங்களைக் கருத்தில் கொண்டு குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தின் போது வீடுகளும் பெரிய கட்டடங்களும் பலமாக ஆடும் காட்சிகளும், கடைகளில் பொருட்கள் சிதறும் காட்சிகளும் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம், வரும் நாட்களில் மீண்டும் வலுவான நிலநடுக்க பின் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT