
ஜப்பானில் முதல்முறை; மருந்து கடைகளில் கிடைக்கும் அவசரகால கருத்தடை மாத்திரைக்கு ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
முக்கியமான கொள்கை முடிவின்படி, ஜப்பான் தனது முதல் கடை விற்பனை அவசரகால கருத்தடை மாத்திரைக்கான (Over-the-Counter Emergency Contraceptive Pill) ஒழுங்குமுறை ஒப்புதலை வழங்கியுள்ளது. மருந்தைத் தயாரிக்கும் நிறுவனமான ஆஸ்கா மருந்து நிறுவனம், திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று தங்கள் தயாரிப்பான நோர்லெவோ மாத்திரைக்கு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஒப்புதல் பெற்றதாக அறிவித்தது. இனி, இதை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் கடைகளிலேயே வாங்கலாம். சமூகத்தில் பழமைவாதக் கருத்துகளைக் கொண்டுள்ள ஜப்பானில், பெண்கள் அவசரகால மருந்துகளைப் பெற மருத்துவமனை அல்லது மருந்தகங்களில் பரிந்துரைச் சீட்டைப் பெற வேண்டியிருந்தது. இந்தத் தேவையை நீக்கியதன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது என்று உரிமை குழுக்கள் வரவேற்றுள்ளன.
தடை
இளம் பெண்களுக்கு இருந்த தடை நீக்கம்
குறிப்பாகப் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு இருந்த தேவையற்ற தடைகள் இதனால் நீக்கப்படும் என்று செயற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். இந்த மாத்திரை உடலுறவுக்குப் பிறகு 72 மணி நேரத்திற்குள் கர்ப்பத்தைத் தடுக்க முடியும். ஆனால், நேரம் செல்ல செல்ல அதன் செயல்திறன் குறையும். எனவே, சரியான நேரத்தில் அணுகுவது அவசியம். இந்த ஒழுங்குமுறை மாற்றத்தால், மாத்திரையை வாங்குபவர்களுக்கு வயது வரம்பு இல்லை மற்றும் பெற்றோரின் ஒப்புதல் தேவையில்லை என்றும் மெய்னிச்சி ஷிம்புன் நாளிதழ் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், இந்த மாத்திரை வழிகாட்டுதல் தேவைப்படும் மருந்து என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள், பெண்கள் அதைப் பயன்படுத்தும் முன், மருந்தாளரின் (Pharmacist) முன்னிலையில் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.