Loading...
பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் அணிய தடை: வெளிநாட்டு மாணவர்களுக்கு 30% உச்சவரம்பு நிர்ணயித்து இத்தாலி நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றம்
இத்தாலி பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிய தடை விதித்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் அணிய தடை: வெளிநாட்டு மாணவர்களுக்கு 30% உச்சவரம்பு நிர்ணயித்து இத்தாலி நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றம்

எழுதியவர் Vasuki
Nov 28, 2026
02:33 pm

செய்தி முன்னோட்டம்

இத்தாலியில் பள்ளிகளில் மாணவிகள் புர்கா, நிகாப் உள்ளிட்ட முகத்தை மறைக்கும் ஆடைகளை அணியத் தடை விதிக்கும் சர்ச்சைக்குரிய 'டெக்ரீட்டோ ஸ்குவோலா' (Decreto Scuola) கல்விச் சீர்திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. செனட் சபையைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கீழவையில் (Chamber of Deputies) நடைபெற்ற வாக்கெடுப்பில் 142 வாக்குகள் ஆதரவாகவும், 112 வாக்குகள் எதிராகவும் பதிவான நிலையில் இச்சட்டம் நிறைவேறியது. புதிய விதிகளின்படி, பள்ளி வகுப்பறைகளில் இஸ்லாமிய மாணவிகள் புர்கா மற்றும் நிகாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை மீறினால் 200 முதல் 1,000 யூரோக்கள் வரை (சுமார் ரூ. 90,000) அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்

வெளிநாட்டு பெற்றோருக்கு இத்தாலிய மொழிப் பயிற்சி

இந்தச் சட்டத்தின்படி, 2027-28 கல்வியாண்டு முதல் முதலாமாண்டு வகுப்புகளில் வெளிநாட்டு வம்சாவளி மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கு மிகாமல் கட்டுப்படுத்தப்பட உள்ளது.

எனினும், இத்தாலிய மொழியில் போதிய புலமை பெற்ற அல்லது ஏற்கனவே இத்தாலியப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வி முறையில் ஒருங்கிணைவதில் சிரமப்படும் குழந்தைகளின் வெளிநாட்டுப் பெற்றோருக்கு இத்தாலிய மொழிப் பயிற்சி வகுப்புகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இத்தாலிய வகுப்பறைகளில் உள்ளூர் குழந்தைகளே சிறுபான்மையினராக ஓரங்கட்டப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

பள்ளியில் யாரும் வெளிநாட்டவர் அல்ல

இத்தாலி அரசின் இந்த நடவடிக்கை சிறுபான்மையினர் மற்றும் வெளிநாட்டுக் குடும்பங்களுக்கு எதிரான பாகுபாடு எனக் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டன.

வாக்கெடுப்பின்போது "பள்ளியில் யாரும் வெளிநாட்டவர் அல்ல" (At school nobody is a foreigner) என்ற பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் முழக்கமிட்டனர்.

முன்னதாக பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பொது இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் முகத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இத்தாலியும் அதே பாதையில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT