அமெரிக்கர்களுக்கு $1 -இல் வீடு வழங்கும் இத்தாலி கிராமம்; என்ன காரணம்?
அமெரிக்க அதிபர் டிரம்பின் வெற்றியால் விரக்தியடைந்து நாட்டை விட்டு வெளியேற திட்டமிடும் அமெரிக்கர்களுக்கு, இத்தாலி கிராமம் ஒரு டாலர் அல்லது ஒரு யூரோவுக்கு வீடு வழங்குவதாக அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளது. இத்தாலியில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏராளமான கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்கள் தற்போது காலியாகவே உள்ளன. அந்த காலியான வீடுகளை நிர்வகிக்கும் நகரசபைகளுக்கு பல பிரச்னைகள் சந்திக்கின்றன. இதன் காரணமாக, வீடுகளை குறைந்த விலையில் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்யும் முயற்சி அதிகரித்துள்ளது. இதன் மூலம் அந்த கிராமங்களின் பொருளாதாரம் மேம்படுவதாக இத்தாலிய அரசு நம்புகின்றது. அந்த வகையில் அமெரிக்கர்களுக்கு, இத்தாலியில் உள்ள ஒல்லோலாய் கிராமம் ஒரு டாலர்/ ஒரு யூரோவுக்கு வீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தனி இணையதளத்தை துவங்கி, அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இத்தாலிய கிராமம்
இந்த திட்டத்தை பற்றி, கிராம மேயர் கூறியதாவது: "எங்கள் கிராமத்தில் அமெரிக்கர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எங்கள் கிராமத்திற்கு புத்துயிர் கொடுக்க உதவுங்கள்." ஒல்லோலாய் கிராமத்தின் தற்போதைய மக்கள் தொகை 1,300 ஆக குறைந்துள்ளது. பலர் வேலை மற்றும் சிறந்த வாழ்க்கையை தேடி கிராமம் விட்டு வெளியேறியதால், மக்கள் தொகை குறைந்து வருகிறது. புதிதாக வரும் வெளிநாட்டினர், வீடுகளை புதுப்பித்து பராமரிக்க வேண்டியதோடு, அதே ஊரில் வாழ வேண்டும் என்பது விதிமுறை. இதன் மூலம் நகரசபைக்கு வருவாய் கிடைக்குமென, இந்த திட்டத்தை இத்தாலிய அரசு கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.