இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போர் 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமரை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் ஆகியோர் சந்தித்தனர். இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் நடந்த சந்திப்பில் இஸ்ரேலுக்கு, தனது முழு ஆதரவை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்தார். இந்த சந்திப்புக்கு பின் பேசிய இஸ்ரேல் பிரதமர், "நாம் இந்த காட்டுமிராண்டித்தனத்தை முழுமையாக அழிக்க வேண்டும். இது நாகரீகத்திற்கும் காட்டுமிராண்டிகளுக்கும் நடக்கும் போர்" என தெரிவித்தார். கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்க அதிபர் பைடனும், இரண்டு நாட்களுக்கு முன்பு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் இஸ்ரேல் சென்று தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும்- ஜார்ஜியா
இஸ்ரேல் பிரதமர் உடனான சந்திப்புக்கு பின் பேசிய மெலோனி, "இஸ்ரேலின் தற்காப்பு உரிமைகளை அதன் மக்களுக்காக நாங்கள் பாதுகாக்கிறோம்", "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதை நாங்கள் முழுமையாக புரிந்துகொள்கிறோம், மேலும் உங்களால் அதைச்சிறந்த முறையில் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்தார். கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ், "காசாவில் நாங்கள் பார்த்ததை விவரிக்க முடியாது." "யூத இனப்படுகொலைக்குப் பின்னர் யூத மக்களுக்கு எதிராக நாங்கள் பார்த்த மிக மோசமான காட்டுமிராண்டித்தனம். அவர்கள் மக்களை கடத்திச் சென்று, பெண்களை கற்பழித்தனர்," என்றார். கடந்த அக்டோபர்-7ஆம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடங்கியது முதல், மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவளித்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.