
இஸ்ரேல் வான் பாதுகாப்பில் ஒரு புதிய சகாப்தம்; அயர்ன் பீம் லேசர் ஆயுதத்தை பயன்படுத்த் தொடங்கியது
செய்தி முன்னோட்டம்
ராணுவத் தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாக, இஸ்ரேல் உலகின் முதல் சக்திவாய்ந்த மற்றும் போரில் சோதிக்கப்பட்ட லேசர் இடைமறிப்பு அமைப்பான அயர்ன் பீமை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் உருவாக்கிய இந்த புதிய ஆயுதம், குறைந்த செலவில் மற்றும் துல்லியமாக வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு, ராணுவப் பாதுகாப்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் பாரம்பரிய ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளான அயர்ன் டோம் போன்றவற்றுக்கு, ஒரு தாக்குதலை இடைமறிக்க பல்லாயிரக்கணக்கான டாலர்கள் செலவாகும். ஆனால், அயர்ன் பீம் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு தாக்குதலை அழிக்க சில டாலர் மின்சாரச் செலவில் போதுமானது. இது ராணுவப் பாதுகாப்பின் பொருளாதாரச் சுமையைக் கணிசமாகக் குறைக்கிறது.
வான் பாதுகாப்பு
இஸ்ரேலின் பல அடுக்கு வான் பாதுகாப்பு
இந்த அமைப்பு, இஸ்ரேலின் தற்போதைய பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு துணை அமைப்பாக செயல்படுகிறது. இது ராக்கெட்டுகள், மோர்டார்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற சிறிய, குறைந்த தூர அச்சுறுத்தல்களை இலக்கு வைத்து, அதிக செலவுமிக்க இடைமறிப்பு ஏவுகணைகளை பெரிய அச்சுறுத்தல்களுக்காகப் பயன்படுத்த உதவுகிறது. கடுமையான போர் ஒத்திகை சோதனைகளில், அயர்ன் பீம் அமைப்பு பல்வேறு வகையான அச்சுறுத்தல்களை மிக விரைவாகவும், துல்லியமாகவும் இடைமறிக்கும் திறனை நிரூபித்துள்ளது. அதன் மேம்பட்ட அடாப்டிவ் ஆப்டிக்ஸ் தொழில்நுட்பம், நீண்ட தூரங்களில் கூட நிலையான இலக்கு வைப்பை உறுதி செய்கிறது. எதிர்காலத்தில், இந்தத் தொழில்நுட்பம் ராணுவப் பயன்பாடுகளுக்காக மேலும் மேம்படுத்தப்படும் என்றும், விண்வெளியில் நிறுவப்படும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளுக்காகவும் பயன்படுத்தப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.