'இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது': சீனா கண்டனம்
காசா மீது இஸ்ரேல் நடத்தி கொண்டிருக்கும் இராணுவ தாக்குதல், தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியுள்ளார். காசா மக்களுக்கு இஸ்ரேல் வழங்கி கொண்டிருக்கும் கூட்டுத் தண்டனையை இஸ்ரேலிய அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஒரு பெரிய போராக மாறுவதை தடுப்பதற்கு சீனாவின் ஒத்துழைப்பைக் கோரி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் நேற்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ-யை தொடர்புகொண்டு பேசினார். இந்நிலையில், தற்போது அமைச்சர் வாங் யீ இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய இளவரசர் பைசல் பின் ஃபர்ஹாத்துடன் தொலைபேசியில் பேசும் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்ததாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தது சீனா
"அனைத்து தரப்பினரும் நிலைமையை மோசமாக்கும் அளவுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. அவர்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று வாங் யீ சவுதி அரேபிய இளவரசரும் வெளியுறவு அமைச்சருமான பைசல் பின் ஃபர்ஹாத்திடம் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டுவர போர்நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக சீனத் தூதர் ஜாய் ஜுன் அடுத்த வாரம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறார். இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலைத் தீர்ப்பதற்கான சரியான வழி இரு நாடுகளுக்கும் இடையே கூடிய விரைவில் அமைதிப் பேச்சுக்களை தொடங்குவதாகும் என்று அமைச்சர் வாங் யீ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.