இஸ்ரேல் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க ஹமாஸ் மறுப்பு
கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை, முழுவதுமாக நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் வரை, பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க முடியாது என ஹமாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இறுதியில் அறிவிக்கப்பட்ட ஏழு நாட்கள் போர் நிறுத்தம், இரு தரப்பினருக்கும் பலனளித்த நிலையில், போர் நிறுத்தத்தை மீண்டும் ஏற்படுத்த எகிப்து தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சு வார்த்தையில், போரில் மற்றொரு தற்காலிக இடைநிறுத்தத்திற்கு சம்மதிக்க மாட்டோம் என்று ஹமாஸ் தொடர்ந்து தெரிவித்துவருகிறது.
20,000-ஐ கடந்த பாலஸ்தீனர்களின் உயிரிழப்பு
காசாவில் தரைவழி தாக்குதலை தீவிர படுத்தியுள்ள இஸ்ரேல், கான் யூனிஸ் நகரை சுற்றி தற்போது குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், இப்போரில் 20,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், 8,000க்கும் மேற்பட்ட குழந்தைகளும், 6,200க்கும் மேற்பட்ட பெண்களும் அடங்குவர். அதேபோல் ஹமாஸ் தாக்குதலில் தற்போது வரை 1,200 இஸ்ரேலிகள் கொல்லப்பட்டுள்ளனர். 240க்கும் மேற்பட்டவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட நிலையில், போர் நிறுத்தத்தின் விளைவாக 100க்கும் விடுவிக்கப்பட்டனர். 20 பணயக் கைதிகளாக கொல்லப்பட்டு இருக்கலாம் என இஸ்ரேல் சந்தேகிக்கும் நிலையில், சுமார் 120 நபர்கள் இன்னும் காசாவில் பணயக் கைதிகளாக உள்ளனர்.