LOADING...
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது
அலி லாரிஜானியின் படுகொலையை ஈரான் உறுதிசெய்யவில்லை

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 17, 2026
03:53 pm

செய்தி முன்னோட்டம்

ஈரானின் பாதுகாப்பு தலைவர் அலி லாரிஜானி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார். லாரிஜானியின் படுகொலையை ஈரான் உறுதிசெய்தால், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் பல இடங்கள் மற்றும் நகரங்கள் மீது திடீர் வான்வழி தாக்குதல்களை நடத்தி, அதன் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொன்று போரை தொடங்கியதற்கு பிறகு நடந்த மிக முக்கியமான படுகொலையாக இது அமையும்.

குறி வைக்கப்பட்ட தாக்குதல்

சுலைமானி, துணைத் தளபதி மற்றும் மூத்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்

ஈரானின் பசிஜ் துணை ராணுவ படையின் தளபதி குலாம்ரெசா சுலைமானி மற்றொரு தாக்குதலில் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலில் அப்படையின் துணைத் தளபதி மற்றும் பிற மூத்த உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இதற்கு முன்னர் நடந்த இராணுவ தாக்குதல்களில் தங்களின் பல தலைமையகங்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து, பசிஜ் படையினர் சமீபத்தில் ஒரு கூடார முகாமை அமைத்திருந்தனர்.

2ஆம் கட்ட தலைவர்

ஈரானின் போரை வழி நடத்திய 2ஆம் கட்ட தலைவர்

மொஜ்தபாவின் உடல்நிலை குறித்து எந்த செய்தியும் இல்லாத நிலையில், லாரிஜானி ஈரானில் கிட்டத்தட்ட இரண்டாம் இடத்தில் இருந்தார். மேலும் இடைக்கால கவுன்சிலுடன் இணைந்து, சீர்குலைந்த அந்த நாட்டை நிர்வகிப்பதில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றி வந்தார். பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வலையமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள், ஈரானின் மீது பழி சுமத்துவதற்காக 9/11 பாணியிலான ஒரு சம்பவத்தை அரங்கேற்ற "சதி" செய்வதாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரான லாரிஜானி எச்சரித்த ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.

Advertisement