LOADING...
அமீரகத்தின் 5 முக்கிய இடங்கள் டார்கெட்: போர் வெடித்தால் குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்படும்
அமீரகத்தின் 5 முக்கிய இடங்கள் மீது ஈரான் டார்கெட்

அமீரகத்தின் 5 முக்கிய இடங்கள் டார்கெட்: போர் வெடித்தால் குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்படும்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 27, 2026
01:54 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா தனது தரைப்படை வீரர்களைப் பயன்படுத்தி ஈரான் எல்லைக்குள் தாக்குதலைத் தொடங்கினால், அதற்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மிக முக்கியமான ஐந்து எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் அரசு சார்பு செய்தி நிறுவனமான 'ஃபார்ஸ்' தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய ஐந்து முக்கிய இடங்களைப் பட்டியலிட்டுள்ளது. 1. துபாயின் ஜெபல் அலி மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம். 2. அபுதாபியின் பராகா அணுமின் நிலையம். 3. அல் தவீலா மின் நிலையம். 4. துபாயின் எம் ஸ்டேஷன் 5. முகமது பின் ரஷித் சூரிய ஆற்றல் பூங்கா.

பாதிப்பு

UAE எதிர்கொள்ளவிருக்கும் பாதிப்புகள்

இந்தத் தளங்கள் தாக்கப்பட்டால் அமீரகம் முழுவதும் மின்தடை ஏற்படுவதுடன், மில்லியன் கணக்கான மக்களின் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், பஹ்ரைன் மற்றும் அமீரகத்தின் பிற முக்கியப் பகுதிகளிலும் "முன்னெப்போதும் இல்லாத" அளவிலான பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

அமெரிக்கா

அமெரிக்காவின் திட்டம் மற்றும் ட்ரம்ப் அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கனவே உள்ள 50,000 அமெரிக்க வீரர்களுடன் கூடுதலாக 10,000 வீரர்களை அனுப்ப அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார். ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க இந்தத் தரைப்படை நடவடிக்கைகள் அவசியமாகக் கருதப்படுகிறது. இதற்கிடையில், ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், "ஈரான் அரசின் வேண்டுகோளை ஏற்று, அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஏப்ரல் 6, 2026 வரை 10 நாட்களுக்கு நிறுத்திவைக்கிறேன்," எனப் பதிவிட்டுள்ளார். ஆனால், ஈரான் தரப்பு இக்கோரிக்கையை தாங்கள் விடுக்கவில்லை என மறுத்துள்ளது. ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் உடன்பட மறுத்தால், அதன் மின் நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் என ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement