அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனிரிடம் ஈரான் விதித்த நிபந்தனைகள்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான 8 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனிர் டெஹ்ரானில் உயர்மட்ட தூதரக மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும், அமெரிக்காவுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் ஈரான் முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
நிபந்தனைகள்
ஈரானின் கடுமையான நிபந்தனைகள்
ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள முற்றுகையை முழுமையாக விலக்க வேண்டும்.
ஈரான் எண்ணெய் ஏற்றுமதி மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா நீக்க வேண்டும்.
பிராந்திய எல்லைகள் மற்றும் அனைத்து முனைகளிலும் அமெரிக்கா தனது போரை முழுமையாக நிறுத்த வேண்டும்.
அமெரிக்கா இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வரை வாஷிங்டன் மீது தங்களுக்கு நம்பிக்கை ஏற்படாது என ஈரான் சபாநாயகர் கலிபாஃப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அணுச்செறிவூட்டல்
அணுச்செறிவூட்டல் விவகாரத்தில் பிடிவாதம்
அமெரிக்கா - ஈரான் அமைதி உடன்பாட்டிற்கு அணுசக்தித் திட்டமே மிகப்பெரிய முட்டுக்கட்டையாக நிலவி வருகிறது.
ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா மொஜ்தபா கமேனியின் நிலைப்பாட்டை மேற்கோள் காட்டிப் பேசிய மொஹ்சென் ரெஸாயி, செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஒரு கிராம் கூட ஈரானிய எல்லைக்கு வெளியே அனுப்பப்பட மாட்டாது என உறுதியாகக் கூறியுள்ளார்.
ஈரானின் 60 சதவீத யுரேனியம் செறிவூட்டும் திறனைப் பெருமளவில் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், தங்களது அணுசக்தித் திட்டம் அணுஆயுத உற்பத்திக்கானது அல்ல என்று ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவரப் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் புதிய இராஜதந்திர முயற்சிக்கு ஈரானின் இந்தக் கடுமையான நிபந்தனைகள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.