முதலில் உங்க ஊர் பஞ்சாயத்த பாருங்க; அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஈரான் பதிலடி
செய்தி முன்னோட்டம்
ஈரானில் நிலவி வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெய்னி மிகக் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். அமெரிக்கா தனது சொந்த நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஈரானின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் துப்பாக்கிச் சூடு கலாச்சாரம், நிறவெறி பாகுபாடு மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறிப்பிட்டுப் பேசிய காமெய்னி, "அமெரிக்காவில் ஒவ்வொரு நாடும் பல மக்கள் கொல்லப்படுகிறார்கள். உங்கள் நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. எனவே, ஈரானைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் உங்கள் நாட்டைப் போய்க் கவனியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு
மேற்கத்திய நாடுகளின் தலையீட்டிற்கு எதிர்ப்பு
ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களைத் தூண்டிவிடுவது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள்தான் என்று காமெய்னி குற்றம் சாட்டியுள்ளார். ஈரானின் இஸ்லாமியக் குடியரசைச் சீர்குலைக்க அந்நிய சக்திகள் திட்டமிட்டுச் செயல்படுவதாகவும், ஆனால் அவர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் அவர் கூறினார். கடந்த காலங்களில் அமெரிக்கா மேற்கொண்ட தலையீடுகள் தோல்வியடைந்ததை அவர் மீண்டும் நினைவூட்டினார். மறுபுறம், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. போராட்டக்காரர்கள் மீது ஈரான் ராணுவம் வன்முறையைப் பயன்படுத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.