மறைந்த ஈரான் அதிபர் ரைசியின் மரணம் குறித்த முதல் அறிக்கை வெளியானது
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்தவர்களின் மரணத்திற்கு வழிவகுத்த சமீபத்திய ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முதல் விசாரணை அறிக்கையை ஈரானின் ஆயுதப் படைகளின் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். தஸ்னிம் செய்தி நிறுவனம், ரைசி பயணித்த ஹெலிகாப்டர், அதன் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வழியிலிருந்து விலகாமல் சென்றதாக அறிக்கையை மேற்கோளிட்டு செய்து வெளியிட்டுள்ளது. விமானி விபத்துக்கு சுமார் 90 வினாடிகளுக்கு முன்பு கான்வாயில் உள்ள மற்ற ஹெலிகாப்டர்களுடன் தொடர்பு கொள்ள முயன்றார் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சேகரிக்கப்பட்ட ஹெலிகாப்டர் மிச்சங்களில் துப்பாக்கி தோட்டாக்களோ அல்லது அதுபோன்ற வெடி பொருட்களோ இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியது.
சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட விபத்து
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்திற்கு ஜனாதிபதி ரைசி பயணம் செய்து கொண்டிருந்த போது தான் விபத்து ஏற்பட்டது. அவருடன் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜானின் ஈரானின் உச்ச தலைவர் முகமது அலி அலே-ஹஷேம் ஆகியோரும் பயணித்தனர். அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஒரு மலையில் விழுந்ததைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் தீப்பிடித்தது. அங்கே நிலவிய மூடுபனி மற்றும் கடுங்குளிர் காரணமாக மீட்பு பணிகள் சிக்கலை சந்தித்தது. "திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:00 மணியளவில், ட்ரோன்களின் உதவியுடன், சம்பவம் நடந்த இடம் சரியாகக் கண்டறியப்பட்டது" என்று முதற்கட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ரைசியின் விமானக் குழுவினருக்கும் கண்காணிப்புக் கோபுரத்துக்கும் இடையே நடந்த உரையாடல்களில் சந்தேகத்திற்குரிய கூறுகள் எதுவும் புலனாய்வாளர்களால் கண்டறியப்படவில்லை.