ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் திறக்கத் தயார்! ஈரான் விதித்துள்ள அதிரடி நிபந்தனைகள் இவைதான்
செய்தி முன்னோட்டம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த போரின் காரணமாக மூடப்பட்டிருந்த ஹார்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதற்கு ஈடாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஈரான் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது என டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசிம் காரிபாபாடி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் இதோ: 1. ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும். 2. மேற்கத்திய நாடுகளால் முடக்கப்பட்ட ஈரானின் 15 பில்லியன் டாலர் நிதியைத் திருப்பி அளிக்க வேண்டும். 3. பல ஆண்டுகளாக ஈரானின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை ரத்து செய்ய வேண்டும்.
கட்டணம்
புதிய 'சேவைக் கட்டணம்'
ஈரான் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட ஒப்பந்தத்தில் உறுப்பினராக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், நீர்ச்சந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரானும் ஓமனும் இணைந்து 'சேவைக் கட்டணம்' வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இது ஒரு வெளிப்படையான முறையாக இருக்கும் என்றும், ஈரான் மீது தாக்குதல் நடத்திய நாடுகளுக்கு இது பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஈரானிடம் தற்போதுள்ள 460 கிலோ யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். அமைதித் தேவைக்காக 20% செறிவூட்டல் போதும் என்றாலும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தைச் சீர்குலைக்க முயன்றதாலேயே 60% வரை செறிவூட்டியதாக அவர் விளக்கம் அளித்தார். தற்போது அணுசக்தி மையங்கள் போரினால் இடிபாடுகளுக்குள் இருப்பதால், மேற்கொண்டு செறிவூட்டல் செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறினார்.