ஈரான் ஏவுகணைகளில் 'தேங்க்யூ இந்தியா': இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈரானின் நெகிழ்ச்சி பதிவு! பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் ஒரு விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியான செயலின் மூலம் ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவிய ஏவுகணைகளில் "இந்திய மக்களுக்கு நன்றி" என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஈரானின் ஏரோஸ்பேஸ் படை வீரர்கள் ஏவுகணைகளை ஏவுவதற்கு முன்னதாக, நீல நிற மார்க்கரால் இந்த வாசகங்களை எழுதிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மும்பையில் உள்ள ஈரான் தூதரகம் மற்றும் ஈரான் அரசு ஊடகங்கள் பகிர்ந்துள்ளன.
காரணம்
ஏன் இந்தியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்?
இந்த இக்கட்டான போர்க்கால சூழலில் ஈரான் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் உள்ளன. ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போரினால் பாதிக்கப்பட்ட ஈரானிய மக்களுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் பெருமளவில் மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் தங்களது நகை, பணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் திரட்டி ஈரானுக்கு அனுப்பி வருகின்றனர். குறிப்பாக, ஒரு காஷ்மீரி பெண் தனது கணவரின் நினைவாக 30 ஆண்டுகளாகச் சேமித்து வைத்திருந்த தங்கத்தை ஈரானுக்குத் தானமாக வழங்கியது ஈரானிய தூதரகத்தை நெகிழச் செய்துள்ளது.
உண்டியல் தானம்
உண்டியல்களைத் தானமாக வழங்கிய இந்தியச் சிறுவர்கள்
ஈரானின் மினாப் பள்ளிக்கூடம் மீதான ஏவுகணைத் தாக்குதலில் பல குழந்தைகள் பலியான சம்பவம் உலகையே உலுக்கியது. அந்தப் பள்ளி மாணவர்களுக்கு உதவ, இந்தியாவைச் சேர்ந்த சிறுவர்கள் தங்களது சிறிய உண்டியல்களில் சேமித்து வைத்திருந்த பணத்தை ஈரானிய தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளனர். "சிறிய இதயங்களின் பெரிய அன்பு" என இதனை ஈரான் தூதரகம் பாராட்டியுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், இந்தியாவை ஒரு 'நட்பு நாடு' என்று அறிவித்துள்ள ஈரான், இந்தியக் கப்பல்கள் எவ்விதத் தடையுமின்றிச் செல்ல அனுமதி அளித்துள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய பலமாகும்.